Skip to main content

‘மத்திய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து ஆர்ப்பாட்டம்’  - தி.மு.க. அறிவிப்பு!

Published on 19/12/2024 | Edited on 19/12/2024
Demonstration against Union Minister Amit Shah  DMK Notice

இந்தியாவில் அரசியல் சாசனம் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் வகையில் நாடாளுமன்றத்தில் உள்ள இரு அவைகளிலும் கடந்த 4 நாட்களாக சிறப்பு விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தின் முடிவில் மாநிலங்களவையில், நேற்று முன்தினம் (17.12.2024) மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார். அப்போது அவர், “அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர் என்று சொல்வது இப்போது ஒரு ஃபேஷன் ஆகிவிட்டது. இதற்குப் பதிலாக, கடவுளின் பெயரை இவ்வளவு சொல்லியிருந்தால், அவர்களுக்குச் சொர்க்கத்திலாவது இடம் கிடைத்திருக்கும். அம்பேத்கரின் பெயரைக் காங்கிரஸ் எடுத்துக்கொள்வதில் பா.ஜ.க மகிழ்ச்சியடைகிறது. ஆனால் அவர் மீதான உண்மையான உணர்வுகள் குறித்தும் காங்கிரஸ் கட்சி பேச வேண்டும்” என்று பேசினார்.

அம்பேத்கர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் அமித்ஷா பேசியதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதே சமயம் , ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, பிரியங்கா காந்தி, திமுக எம்.பி. டி.ஆர்.பாலு உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சியினர், மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு கண்டனம் தெரிவித்து கையில் அம்பேத்கர் புகைப்படம் ஏந்தி நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று (18.12.2024) போராட்டம் நடத்தினர். மேலும், எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ‘ஜெய் பீம்’ என முழக்கமிட்டனர். இதனையடுத்து இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.

இந்நிலையில் அமித்ஷாவின் பேச்சை கண்டித்து இன்று (19.12.2024) போராட்டம் நடத்த உள்ளதாக திமுக தலைமைக் கழகம் சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், “இந்திய அரசியலைமப்புச் சட்டத்தை வடிவமைத்த சட்டமேதை, புரட்சியாளர் அம்பேத்கரை அவமதித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைக் கண்டித்து திராவிட முன்னேற்றக்கழகம் சார்பில் இன்று (19.12.2024) காலை 11.30 மணியளவில் தமிழ்நாடு முழுக்கவும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்