Skip to main content

முதல்வரை வரவேற்பதற்காக நீதிமன்ற உத்தரவை மீறும் அ.தி.மு.கவினர்! மக்கள் அதிருப்தி!

Published on 27/08/2020 | Edited on 27/08/2020


 
கரோனா நோய் தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காகவும், பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காகவும், நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காகவும் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று கடலூர் மாவட்டத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். கடலூர் வருகை தரும் எடப்பாடி பழனிச்சாமியை வரவேற்று புதுச்சேரி - கடலூர் நெடுஞ்சாலையில் விளம்பர பதாகைகளை ஆளும் கட்சியினர் வைத்துள்ளனர். 


 
கடந்த 2019 செப்டம்பர் மாதத்தில் சென்னை குரோம்பேட்டை பகுதியை சேர்ந்த சுபஸ்ரீ  (23) என்ற இளம்பெண் பல்லாவரம் நோக்கி இருசக்கர வாகனத்தில் ரேடியல் சாலை பகுதியில் சென்றபோது, சாலை ஓரத்தில் ஆளும் கட்சியினர் வைத்திருந்த பேனர் சரிந்து சுபஸ்ரீ மீது விழுந்ததில் நிலைதடுமாறி கீழே விழுந்த அவர் மீது பின்னால் வந்த தண்ணீர் லாரி மோதியதில் உயிரிழந்தார். 

 

அதையடுத்து சென்னை உயர்நீதிமன்றம் தன்னிச்சையாக இவ்வழக்கை எடுத்து இனிமேல் பொது வெளியில் விளம்பர பதாகைகள் வைக்கக்கூடாது என்று உத்தரவிட்டது. அதன் காரணமாக நெடுஞ்சாலைகளில் விளம்பர பதாகைகளை எந்த கட்சியினரும் வைப்பதில்லை. 

 

ஆனால் கடலூர் மாவட்டத்தில் நடைபெறும் நிகழ்ச்சிக்காக முதல்வரை வரவேற்று வழிநெடுகிலும் வைக்கப்பட்டுள்ள பேனர்கள் நீதிமன்ற உத்தரவை ஆளும் கட்சியினரே உதாசீனப்படுத்துவதாக உள்ளது. மேலும் கரோனா ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில் வழிநெடுக பேனர்கள் வைத்து, ஆடம்பரமாக விழா கொண்டாடுவது ஊரடங்கு விதிகளையும் மீறுவதாக உள்ளது. 

 

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை மாவட்ட நிர்வாகமும்,  மாவட்ட காவல் துறையும் அமுல்படுத்தாமல் அமைதி காப்பது ஏன் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கேள்வியெழுப்புகின்றனர்.  

 

 

சார்ந்த செய்திகள்