ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை வலியுறுத்தும் அரசியலமைப்பு 129-வது சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக பொருளாளரும் திமுக மக்களவை குழுத்தலைவருமான டி. ஆர். பாலு எம்.பி. நாடாளுமன்றத்தில் திமுகவின் நிலைப்பாட்டை வலியுறுத்தி பேசினார்.
அப்போது, "தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் கூறியிருப்பதுபோல ஒரே நாடு ஒரே தேர்தல் முறை கூட்டாட்சிக்கு எதிரானது. ஜனநாயகத்தை அழிக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் இம்மசோதாவை, நான் ஆதரிக்க முடியாது. ஒன்றிய பாஜக அரசிற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இல்லாத நிலையில் இந்த மசோதாவை எப்படி சட்டமாக்க முடியும்? தொடர்ந்து ஐந்தாண்டுகள் ஆட்சி செய்வதற்காகவே வாக்காளர்கள் ஒரு அரசை தேர்தெடுக்கிறார்கள். அது வாக்காளர்களின் அடிப்படை உரிமை. ஒரே தேர்தல் முறை மூலமாக அவ்வுரிமையை இந்த மசோதா பறிக்கிறது.
ஒரே நாடு ஒரே தேர்தல் முறையில் தேர்தல் நடத்த ஒவ்வொருமுறிஅயும் 13981 கோடி ரூபாய் அரசுக்கு கூடுதலாக செலவாகும், மேலும் 9284 கோடி ரூபாய் கூடுதல் வாக்குப்பதிவு எந்திரங்கள் வாங்க மட்டுமே செலவு செய்ய வேண்டும். இது தேவையில்லாதது. நாடு முழுவதும் அனைத்து கட்சிகளின் கருத்து ஒற்றுமையுடன் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது நடைமுறை சாத்தியமில்லை என 2015ஆம் ஆண்டு நாடாளுமன்ற நிலைக்குழுவின் 79வது அறிக்கை முடிவு செய்திருக்கிறது என்பதை இங்கே நினைவூட்டுகிறேன்.
மேலும் ஒன்றிய அரசு நாடாளுமன்ற கூட்டுக்குழுவில் இந்த மசோதாவை முதலில் விவாதித்துவிட்டு மீண்டும் அவையில் விவாதத்திற்கு எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்றார்