தமிழக சட்டமன்றத்தில் தற்போது 2019 - 2020ம் ஆண்டுக்கான பட்ஜெட் மீது விவாதம் நடந்து வருகிறது.
இன்று சட்டமன்றத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரும், நாகை எம்எல்ஏவுமான மு.தமிமுன் அன்சாரி பேசும் போது, பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித் துறை, உயர் கல்வித்துறை, சுகாதார துறை ஆகியவற்றுக்கும், வறுமை ஒழிப்புக்கும் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்திருப்பதற்கும் வரவேற்பளித்து பேசியவர், சிறுபான்மை சமூக மக்களுக்கு ஒரு திட்டம் கூட அறிவிக்கப்படாததை நாகாரீகத்துடன் சிலேடையாக, சுட்டிக் காட்டினார்.
அதாவது பட்ஜெட்டில் பழனி பஞ்சாமிர்தமும், பன்னீரும் மணப்பதாகவும், பிரியாணி மணமும் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்றதும் அனைவரும் சிரித்தனர்.
முதல்வர் பழனிசாமியை பழனி பஞ்சாமிர்தத்துடனும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை பன்னீர் மணத்துடனும் உவமைப்பட கூறி, அதே சமயம், தான் எதிர்பார்த்தது இல்லை என்பதை பிரியாணி மணத்துடன் ஒப்பிட்டு பேசியது அவையில் ருசிகரமான சம்பவமாக அமைந்தது. இதை முதல்வர், துணை முதல்வர் உட்பட அமைச்சர்கள் ரசித்தனர்.