நீட் உள்ளிட்ட முக்கிய மசோதாக்களுக்கு தமிழக ஆளுநர் அனுமதியளிக்காததால் சட்டமன்றத்தின் மாண்பையும் தமிழக மக்களையும் மதிக்கவில்லை என்று கூறி தமிழக அரசு ஆளுநர் கொடுத்திருந்த தேநீர் விருந்தை புறக்கணித்திருந்தது. நேற்று ஆளுநரை சந்தித்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ''முதல்வரின் பல்வேறு வலியுறுத்தல்களுக்குப் பிறகும் ஆளுநர் தற்போது வரை நீட் விலக்கு உள்ளிட்ட பல்வேறு மசோதாக்களுக்கு பதிலளிக்கவில்லை. தற்போது வரை ஆளுநர் இது குறித்து எந்தவித உத்தரவாதத்தையும் எங்களுக்கு வழங்கவில்லை. எனவே ஆளுநர் கொடுக்க இருக்கும் தேநீர் விருந்து நிகழ்விலும், பாரதியார் சிலை நிகழ்விலும் தமிழக அரசு பங்கேற்காது'' என விளக்கியிருந்தார்.
நேற்று மாலை நடைபெற்ற தேநீர் விருந்தில் அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் கலந்து கொண்டன. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக தலைவர் அண்ணாமலை ''தமிழக அரசு ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணித்ததால் ஆளுநருக்கு டீ செலவு மிச்சம். இதனால் மக்கள் வரிப்பணம் கொஞ்சம் சேவ் ஆகிறது என்றார்.
அண்ணாமலையின் இந்தக் கருத்துக்கு டிவிட்டர் வாயிலாக பதிலளித்துள்ள விசிக எம்எல்ஏ ஆளூர் ஷா நவாஸ் 'டீ செலவு மிச்சமா? டீசல் செலவு மிச்சம் என பதிவிட்டுள்ளார். அதேபோல் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவருடைய டிவிட்டர் பக்கத்தில், 'இன்னொரு அம்சத்தையும் குறிப்பிட மறந்து விடாதீர்கள் ஆளூர் ஷா நவாஸ் சகோதரரே. இந்த தேநீர் விருந்து யாருடைய தனிப்பட்ட நிதியிலிருந்து வழங்கப்படுவதில்லை. தமிழ் மக்களின் பணம் செலவிடப்படுகிறது. சொன்னதுபோல் சேமிப்பு இருந்ததா இல்லையா என்பதை அறிய பில் (கோப்பு) வரும் வரை காத்திருப்போம்' தெரிவித்துள்ளார்.