கரோனா வைரஸ் பரவுதலைத் தடுக்கவும் மக்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளையும் உணவுகளை வழங்கவும் சென்னையிலுள்ள திமுக எம்.எல்.ஏ.க்கள் வரிந்து கட்டிக்கொண்டு களமிறங்கியிருக்கிறார்கள். சென்னை கிழக்கு மாவட்டம் திரு.வி.க.நகர் பகுதியிலுள்ள டெட்ராட் பப்ளிக் சாரிடபிள் அறக்கட்டளை நிர்வகித்து வரும் அன்பகம் மறுவாழ்வு மையத்தில் மனநிலை சரியில்லாத மற்றும் ஆதரவற்றோர்கள் 500-க்கும் மேற்பட்டவர்கள் இருந்து வருகின்றனர். அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளையும் உணவுகளையும் தனது மகள் டாக்டர் ஜெயகல்யாணியுடன் இணைந்து வழங்கியுள்ளார் திமுக எம்.எல்.ஏ. சேகர்பாபு.
அந்த மறுவாழ்வு மையத்திலுள்ள அனைத்து ஆதரவற்றவர்களுக்கும் மருத்துவ பரிசோதனைகளை செய்த டாக்டர் ஜெயகல்யாணி, அவர்களுக்கு கரோனா தொற்று பரவாமல் இருபதற்கான முகக் கவசங்கள், சானிடைஷர்கள் வழங்கியதுடன் மையத்திலுள்ள அனைவருக்கும் அரிசி, சேமியா, பிஸ்கட், ரொட்டி, பால் உள்ளிட்ட அத்யாவசிய பொருட்களையும் வழங்கினார். மேலும், அறக்கட்டளை நிர்வாகிகளிடம், ’’ மருத்துவ உதவிகளும் உணவு உதவிகளும் எப்போது தேவைப்பட்டாலும் தகவல் சொல்லுங்கள். உடனடியாக கொடுத்து உதவுகிறோம் ‘’ என சேகர்பாபுவும் அவரது மகள் ஜெயகல்யாணியும் உறுதி தந்திருக்கிறார்கள்.
அதேபோல, சென்னை சைதாப்பேட்டை எம்.எல்.ஏ.வும் சென்னையின் முன்னாள் மேயருமான மா.சுப்பிரமணியன், சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கும் மக்களுக்கும் தேவையான ஹேண்ட் சானிடைஷர், சோப்பு, முகக் கவசங்கள் ஆகியவற்றை வழங்கியிருக்கிறார். அரசு பொது மருத்துவமனையின் தலைமை டாக்டர் தணிகாசலத்திடம் 10,000 முகக் கவசங்கள், 250 ஹேண்ட் சானிடைஷர்கள் வழங்கியிருக்கிறார் மா.சுப்பிரமணியன். மேலும், தனது தொகுதி முழுக்க கிருமி நாசினி தெளிக்கவும் கட்சியின் இளைஞர்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறார் மா.சு.! சென்னையில் கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டிருக்கிறார்கள் திமுக எம்.எல்.ஏ.க்கள் !