கரோனா வைரஸ் தொற்று பக்கம் அனைவரின் கவனமும் திரும்பியுள்ளதால் தமிழகத்தில் ஆங்காங்கே மணல் கொள்ளை சக்கைப்போடு போட்டுக்கொண்டிருக்கிறது. மணல் கொள்ளையைக் கண்டுபிடித்து லாரியை பறிமுதல் செய்தால் அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் நேரடியாக காவல்துறையில் உள்ள இன்ஸ்பெக்டர் முதல் உயர் அதிகாரிகள் வரை தொடர்பு கொண்டு வாக்குவாதம் செய்கிறார்களாம். இதனால் சில இடங்களில் பறிமுதல் செய்யப்பட்ட சில மணி நேரங்களிலேயே லாரிகள் விடுவிக்கப்படுவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
புதுக்கோட்டை விராலிமலை பக்கத்தில் மணல் திருட்டு நடந்து கொண்டிருப்பதாக தகவல்கள் கிடைக்க காவல்துறை எஸ்.பி. அருண்சக்திகுமார் மணல் லாரிகளை மடக்க உத்தரவிட்டு, லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தகவல் அறிந்த மாவட்ட அமைச்சர் எஸ்.பியிடம் பேச, அடுத்த முறை கண்டிப்பாக பறிமுதல் செய்யப்படும். வேண்டுமானால் தன்னை டிரான்ஸ்பர் லிஸ்டில் சேர்த்துவிடுங்கள் எனக் கூறியிருக்கிறாராம்.
இதேபோல் கரூரிலும் மணல் திருட்டு அதிகமாக நடக்கிறது என திருச்சி மாவட்ட டி.ஐ.ஜி. பாலகிருஷ்ணனுக்கு தகவல் வந்திருக்கிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு, மணல் லாரிகள் பிடிபட்டுள்ளது. அம்மாவட்ட அமைச்சர் தகவல் கிடைத்தவுடன் காவல்நிலைய இன்ஸ்பெக்டர்களிடம் பேச, உயரதிகாரி உத்தரவு என்று தெரிவித்துள்ளனர். டி.ஐ.ஜியிடம் பேசிய அமைச்சர் வாக்குவாதத்தில் ஈடுபட்டாராம். அப்போது டி.ஐ.ஜி., தன்னை டிரான்ஸ்பர் லிஸ்டில் சேர்த்துவிடுங்கள், எங்களுக்கு வரும் புகார்கள் மீது நடவடிக்கை எடுப்பதைத் தடுக்காதீர்கள் எனக் கூறியுள்ளாராம்.
மணல் கொள்ளை தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கிறது, காவல்துறையில் உயரதிகாரிகள் டிரான்ஸ்பர் லிஸ்ட் தயாரிக்கப்படுவதை அறிந்ததால்தான் மணல் கொள்ளையைத் தடுத்தோம் என்றால் தாங்கள் விரும்பிய இடங்களில் டிரான்ஸ்பர் கிடைக்கும் என்று அதிகாரிகள் தங்கள் நடவடிக்கையை மாற்றிக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
-மகேஷ்