சொத்து குவிப்பு வழக்கில் பெங்களுரூ சிறையில் உள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் காலில் விழுந்து முதல்வர் பதவி வாங்கியவர் எடப்பாடி என தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி பேசினார். அப்படி பேசியவர் கொச்சையான வார்த்தையில் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதனை பலரும் கண்டித்தனர்.
உதயநிதியின் பேச்சைக் கண்டித்து தமிழகத்தின் பல இடங்களில் அ.தி.மு.க.வினர் போராட்டம் நடத்தினர். திருவண்ணாமலை வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஆரணி நகரில் ஜனவரி 12ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய வடக்கு மா.செவும், செய்யார் தொகுதி எம்.எல்.ஏவுமான தூசி.மோகன், “உங்க குடும்பத்தைப்பத்தி தெரியாதா, எங்களை கோபப்படவைக்காதிங்க, வெட்டி வீசிடுவோம். எப்படி பேசறதுன்னு உங்களுக்கு தெரியுமா” என ஒருமையிலும் அநாகரிகமான வார்த்தையிலும் பேசினார்.
சட்டமன்ற உறுப்பினராகவுள்ள தூசி.மோகன், மேடையில் நூற்றுக் கணக்கானவர்கள் முன்னிலையில் அநாகரிகமான வார்த்தையில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. அநாகரிகமாக பேசினார் என்பதற்காக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தும் நாம் மேடையேறி பேசுகிறோம். கண்டித்து பேசுவதை விட்டுவிட்டு அவர் பேசியதைப்போல் எம்.எல்.ஏவே கொச்சையாக பேசுகிறாறே என அ.தி.மு.க. பிரமுகர்களே முகம் சுளித்தனர்.
அ.தி.மு.க. எம்.எல்.ஏவின் அநாகரிக மற்றும் மிரட்டல் பேச்சைக்கேட்டு ஆரணியை சேர்ந்த தி.மு.க. வழக்கறிஞர் கார்த்திக், ஆரணி நகர காவல்நிலையத்தில் புகார் தந்துள்ளார்.
அநாகரிகமாக பேசினார் என உதயநிதி மீது, அ.தி.மு.க.வினர் தந்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்துள்ளது போலீஸ். அ.தி.மு.க. எம்.எல்.ஏ மிரட்டல் விடுத்து பேசியது தொடர்பாக புகார் தந்தும் அந்தப் புகார் மீது நடவடிக்கை எதுவும் எடுக்காமல் போலீஸார் வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.