
அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தொடர்ந்து அவர் எம்.பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றன.
ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஏப்ரல் 15ல் (இன்று) ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ் கட்சியினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்ற போராட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்து கொண்டார்.
அதேபோல் மதுரை, விழுப்புரம், ஆரணி, தாம்பரம் போன்ற பகுதிகளிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டன. மதுரையில் காவலர்கள், போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தியதால் சாலையில் போராட்டம் நடைபெற்றது. ரயில்களில் ஏறியும் ரயில்களை மறித்தும் இப்போராட்டங்கள் தொடர்ந்து நடைபெறும் என்றே காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் கூறுகிறனர்.