காங்கிரஸ் கட்சியையும், கோஷ்டிகளையும் பிரிக்கவே முடியாது. இதனை உணர்த்தும் விதமாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் பிறந்த தினத்தையே கோஷ்டிகளாகப் பிரிந்து கொண்டாடி இருக்கிறார்கள் ஈரோடு மாவட்ட காங்கிரஸார்.
இதில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, தெற்கு மாவட்ட தலைவர் மக்கள் ஜி.ராமன் தலைமையில் நடந்தது. இவர், தற்போதைய தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசரின் ஆதரவாளர். விழா தொடங்கும் முன்பு, எல்லையில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
பிறகு, ராகுல்காந்தி பிறந்ததினத்தை கேக் வெட்டிக் கொண்டாடாமல், கரோனாவால் பெரும் இழப்பை சந்தித்திருக்கும் விவசாயிகளுக்கு உதவும் விதமாக, விவசாயிகள் பாதுகாப்பு தினமாகக் கொண்டாடப்பட்டது. இதற்காக, ஈரோடு தெற்கு மாவட்டம் முழுவதும் 25 ஆயிரம் மரக்கன்றுகளை நட முடிவுசெய்து, தெற்கு மாவட்ட கட்சி அலுவலகத்தில் வைத்து முதற்கட்டமாக ஆயிரம் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. மேலும் விதைப்பொருட்கள், பனை விதைகள், அத்தியாவசியப் பொருட்களும் கொடுக்கப்பட்டது.
இதேபோல், முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் ஆதரவாளர்கள், மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில், மூலப்பட்டறையில் உள்ள ஜவகர் இல்லத்தில் வைத்து, ராகுல்காந்தியின் பிறந்த தினத்தைத் தனியாக கொண்டாடினார்கள். நிகழ்ச்சிக்கு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஈ.பி.ரவி தலைமை தாங்கினார். பிறகு விவசாயிகளுக்கு விதைகள், மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மேலும், நசியனூர், சென்னிலமை வட்டாரம் வெள்ளோடு பகுதி விவசாயிகளுக்கும் விதைகளையும், மரக்கன்றுகளையும் வழங்கினார்கள்.