திருவொற்றியூர், திருப்போரூர், பல்லாவரம் ஆகிய மூன்று தொகுதிகளின் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பிரச்சாரத்தில் சீமான் பேசியதாவது, “சோலார் மின் உற்பத்தியில் நாம் மிகவும் பின்தங்கி இருக்கிறோம். மின் உற்பத்தி என்றாலே ஆட்சியாளர்களுக்குப் பிடிக்கவில்லை. தனியாரிடம் அதிக விலைக்கு காசு கொடுத்து வாங்கி கமிஷன் பார்க்கிறார்களே தவிர, உற்பத்தி செய்ய அரசுகள் முன்வருவதில்லை.
நான் பிறந்த ஊருக்கு அருகில் 20 கிராமங்களில் 5 ஆயிரம் ஏக்கர் நிலத்தை அதானிக்கு கொடுத்துவிட்டு, அவரிடமே ஒரு யூனிட் 7 ரூபாய்க்கு வாங்கியவர்தான் ஜெயலலிதா. கடந்த 7 ஆண்டுகளில் மோடியின் முகத்தில் தாடி மட்டுமே வளர்ந்துள்ளது. நாட்டில் வளர்ச்சி என்று ஒன்றுமே இல்லை. வெங்காய விலையேற்றம் குறித்து கேள்வி கேட்டால், ‘நான் வெங்காயம் சாப்பிடுவதில்லை. அதனால் எனக்கு வெங்காயம் விலையேற்றம் குறித்து கவலையில்லை’ என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொறுப்பில்லாமல் பதில் அளிக்கிறார். விவசாயி நல்லா இருந்தால்தான் இந்த நாடு நன்றாக இருக்கும். செல்ஃபோன், ஐபேட் இருந்தால் மட்டுமே சோறு கிடைத்துவிடாது. ஓட்டுக்காக மிக்ஸி, கிரைண்டர் கொடுத்தீர்கள். தற்போது வாஷிங்மிஷின் தருகிறோம், கஷ்டமாக இருந்தால், துவைத்து, காய வைத்து, தேய்த்து தருகிறோம் என்கிறார்கள். தேர்தலில் ஒரு தடவை கூட, பணம் கொடுத்தவரை கைது செய்யவில்லை” என அவர் தெரிவித்தார்