முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் தலைவருமான ராஜீவ்காந்தி, தமிழ்நாட்டிலுள்ள ஸ்ரீபெரும்புதூரில் 1991-ல் குண்டு வெடிப்பில் படுகொலை செய்யப்பட்டார். அவருடன் சேர்ந்து 14 பேர் கொல்லப்பட்டனர். இக்கொலைச்சதி வழக்கில் கைதான 7 பேரில், உச்சநீதிமன்றத் தீர்ப்பால் பேரறிவாளன் விடுதலையானார்.
இந்நிலையில், நம்முடைய மன உணர்வை வெளிப்படுத்தும் விதமாக வெள்ளைத் துணியால் வாயைக் கட்டிக்கொண்டு, உங்களுடைய பகுதியில் முக்கியமான இடத்தில், ‘வன்முறையை எதிர்ப்போம், கருத்து வேறுபாடுகளுக்கு கொலை செய்வது ஒரு தீர்வாகாது’ என்று எழுதிய பதாகையைக் கையில் பிடித்துக்கொண்டு, அறப்போராட்டம் நடத்துங்கள் என அறிக்கை வாயிலாகக் கேட்டுக்கொண்டார், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி.
சீரியஸான இந்த விவகாரத்தை சிவகாசியிலும் காமெடியாக்கிவிட்டனர், கதர்ச்சட்டையினர். எப்படி தெரியுமா?
இத்தனைக்கும் சிவகாசி சட்டமன்றத் தொகுதியை உள்ளடக்கிய விருதுநகர் பாராளுமன்றத் தொகுதியின் எம்.பி. மாணிக்கம்தாகூரும் காங்கிரஸ்காரர்தான். சிவகாசி எம்.எல்.ஏ. அசோகனும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்தான். இப்படியொரு வலுவான பின்னணி இருக்கும்போது, சிவகாசியில் மிகவும் குறைந்த அளவிலேயே அறப்போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
இந்தப் போராட்டத்தில், சிவகாசி நகர காங்கிரஸ் தலைவர் குமரனோ, எம்.எல்.ஏ. அசோகனோ கலந்துகொள்ளவில்லை. அதனால், ‘மாபெரும்(?) சாலை மறியல் நடந்துகொண்டிருக்கிறது. எம்.எல்.ஏ.அசோகன் எங்கிருந்தாலும் ரோட்டுக்கு வரவும்..’ என்று வலைதளங்களில் கேலி பேச ஆரம்பித்தனர்.
நாம் சிவகாசி நகர காங்கிரஸ் தலைவர் குமரனைத் தொடர்புகொண்டோம். “பேரறிவாளன் விடுதலை தீர்ப்பு வந்தவுடன், காங்கிரஸில் ஒரு கோஷ்டி தன்னிச்சையாக நேற்று (18-ஆம் தேதி) நடத்திய போராட்டம் அது. போட்டோவுக்கு போஸ் கொடுப்பதற்காக உட்கார்ந்திருக்கிறார்கள். மற்றபடி, சிவகாசியில் அவரவர் இருக்கும் இடத்தில் வாயில் துணியைக் கட்டி காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தாமல் இல்லை. சிவகாசி போலீசார் அனுமதியளிக்கவில்லை. அதனாலேயே, நகரின் முக்கிய இடத்தில் போராட்டம் நடத்தமுடியவில்லை இன்னொரு விஷயம், ஆளும்கட்சியான திமுகவை அனுசரித்து நகர் நலனில் அக்கறை செலுத்திவருகிறோம். அதனால், மக்களின் தேவைகளை நிறைவேற்றவும் முடிகிறது. பெரிய அளவில் போராட்டம் நடத்தி திமுகவை பகைத்துக்கொள்ள வேண்டுமா?” என்று விளக்கம் தந்தார்.