இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இன்று (19.11.2021) நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது, ஆட்சிக்கு வந்ததுமுதல் விவசாயிகளுக்குச் சேவை செய்வதையே முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளோம் எனத் தெரிவித்த அவர், மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளார்.
மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறக் கோரி விவசாயிகள் ஓராண்டுக்கு மேல் போராடிவந்த நிலையில் தற்போது பிரதமர் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து பல்வேறு அரசியல் கட்சியினர் கருத்து தெரிவித்துவருகின்றனர். வரப்போகின்ற பஞ்சாப், உ.பி. சட்டமன்ற தேர்தலைக் கருத்தில்கொண்டு, அந்த அச்சத்தால் எடுக்கப்பட்ட முடிவு இது என முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். அதேபோல் பாஜக நிர்வாகியும் முன்னாள் மத்திய இணையமைச்சருமான பொன். ராதாகிருஷ்ணன் இதுகுறித்து தனியார் தொலைக்காட்சியில் பேசுகையில், ''விவசாயிகள் பிரச்சனை மட்டுமில்லாமல் நாடு முழுவதும் எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் அதை அரசியலாக்கி அதன்மூலமாக ஆதாயம் தேடும் பழக்கத்தின் கண்ணோட்டத்தோடு காங்கிரஸ் கட்சியினர் பேசுகிறார்கள். இது வழக்கமான ஒன்று. நீண்டகாலமாக விவசாயிகளுக்கு இருக்கும் பிரச்சனைகளை முடிவுக்குக் கொண்டுவரவே வேளாண் சட்டம் கொண்டுவரப்பட்டது. அவர்கள் வருமானத்தை இரட்டிப்பாக்கவே இந்த சட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால் விவசாயிகள் போராட்டத்தைப் பயன்படுத்திக்கொண்டு அதை அரசியலாக்கி காங்கிரஸ் போன்ற கட்சிகள் செயல்பட்டன. தற்போது இந்த முடிவை எடுத்திருப்பது பிரதமரின் மிகப்பெரிய மனதைக் காட்டுகிறது'' என்றார்.