அடுத்த வருடம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு எதிராகக் கூட்டணி அமைப்பது குறித்து பல்வேறு எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பேசி வருகின்றனர். அந்த வகையில் பீகார் மாநிலம் பாட்னாவில் எதிர்க்கட்சித் தலைவர்களின் முதல் ஆலோசனைக் கூட்டம் கடந்த 23 ஆம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 16 கட்சிகள் பங்கேற்றன. இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் திமுக சார்பில் கலந்து கொண்டு பல்வேறு கருத்துக்களை முன்வைத்திருந்தார்.
இதையடுத்து எதிர்க்கட்சித் தலைவர்களின் 2வது ஆலோசனைக் கூட்டம் பெங்களூருவில் ஜூலை 17 மற்றும் 18 ஆகிய இரு தேதிகளில் நடைபெற உள்ளதாக காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன. மேலும், எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பது குறித்து விவாதிப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் பெங்களூருவில் நடைபெற உள்ள எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் எம்.பிக்கு காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அழைப்பு விடுத்துள்ளார்.