தமிழக சட்டசபையில் கடந்த மாதம் 18,19 ஆகிய தேதிகளில் 2022-2023ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பொது மற்றும் வேளாண் பட்ஜெட்டுகள் மீதான விவாதம் 21 முதல் 24ஆம் தேதி வரை நடந்தது. இந்த நிலையில், மீண்டும் கூடிய சட்டசபையில் துறை வாரியாக மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
நேற்று நடந்த பேரவை கூட்டத்தில் பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள அயோத்தியா மண்டபத்தினை இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவது குறித்து விவாதிக்க கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார். அந்த தீர்மானத்தின் மீது பேசிய முதல்வர்.''சாமானிய மக்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பாதிக்கப்படுகிறார்கள். இந்த நேரத்தில் அரசியலைப் புகுத்தி கட்சியை வலுப்படுத்த நினைத்தால் அது நடக்கவே நடக்காது. ஏழை, எளிய மக்கள் பாதிக்கக்கூடிய விஷயங்களில் பாஜக கவனம் செலுத்த வேண்டும்'' என்றார். இந்நிலையில் நூல் விலையேற்றம் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்துள்ளார். இதனால் இன்று நூல் விலையேற்றம் தொடர்பாக கைத்தறித்துறை அமைச்சர் விளக்கம் கொடுக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.