
சீனா இந்தியா மீது தாக்குதல் நடத்தத் தயாராகி வருகிறது. ஆனால், அதை மத்திய அரசு மறைக்கிறது என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. இந்தியா முழுவதும் 12 மாநிலங்களில் 3,570 கிலோமீட்டர் நடைபயணம் மேற்கொண்டு மக்களைச் சந்தித்து உரையாடி வருகிறார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசியக்கொடியை அசைத்து இந்த யாத்திரையைத் தொடக்கி வைத்தார். இந்தியாவின் இறையாண்மையும் அரசியலமைப்புச் சட்டமும் பாதுகாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி குமரி முதல் காஷ்மீர் வரை இந்தப் பயணத்தை 150 நாட்களுக்கு மேற்கொள்ளும் ராகுல்காந்தி, நேற்று நடைபயணத்தில் 100 ஆவது நாளாக நிறைவு செய்தார்.
இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “இந்தியா, சீனா பிரச்சனை பற்றி ஊடகங்கள் என்னிடம் ஏன் கேள்விகளைக் கேட்பதில்லை. தொடர்ந்து எல்லையில் ஆயுதங்களைக் குவித்து வரும் சீனா இந்தியா மீது போர் தொடுக்கத் தயாராகி வருகிறது. ஆனால், இந்த உண்மையை மக்களிடம் இருந்து மத்திய அரசு மறைத்து வருகிறது. இதைப் புறக்கணிக்கவோ மறுக்கவோ முடியாது.
லடாக் மற்றும் அருணாச்சலப்பிரதேச எல்லைகளில் சீனா தாக்குதலுக்குத் தயாராகி வருகிறது. ஆனால், மத்திய அரசு சீனா மீது கவனம் செலுத்துவது இல்லை. மத்திய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சர் தனது புரிதலை ஆழப்படுத்த வேண்டும். காங்கிரஸ் செயலிழந்துவிட்டது எனக் கூறுவது தவறு. பாஜகவை காங்கிரஸ் வீழ்த்தும்” எனக் கூறினார்.