ஊரடங்கில் ஏற்படுத்தப்பட்ட தளர்வுகளால் கரோனாத் தொற்றின் வேகம் அதிகரித்து, மக்கள் மத்தியில் மரண பீதி பரவிவரும் நிலையில், ’இதற்குக் காரணம் மக்களின் ஒத்துழைப்பு இல்லாததால்தான். அவர்கள்தான் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கவில்லை’ என்று அரசுத் தரப்பு மக்களையே குற்றம் சாட்டிவருகிறது.
உண்மையில் அரசு சொல்வது போல், மக்கள்தான் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கவில்லையா? என்றால் தமிழக அமைச்சர்கள் பலரும் தாங்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில், சமூக இடைவெளிபற்றி கவலைப்படுவதில்லை என்று பதிலுக்கு மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதற்கு அவர்கள் காட்டும் அண்மை உதாரணம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பங்கேற்ற நிகழ்சிகளை.
புதுக்கோட்டை செல்லப்பா நகரில் அம்ருத் திட்டத்தின் கீழ் ரூபாய் 80 லட்சம் செலவில் உருவாகப்பட்ட பூங்காவை மாவட்ட ஆட்சித்தலைவர் உமா மகேஸ்வரி தலைமையில் பெருங்கூட்டத்தைக் கூட்டி திறந்து வைத்திருக்கிறார் அமைச்சர். மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன், நகராட்சி ஆணையர் சுப்ரமணியன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டவிழாவில் அங்கிருந்த எவரும் சமூக இடைவெளி பற்றியே கவலைப்படாமல், நெருக்கியடித்திருக்கிறார்கள்.
மேலும் அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்துகொண்ட பிடாரி அம்மன் கோவில் திருப்பணி ஆய்வு நிகழ்ச்சியும், நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சிகளும் இதே லட்சணத்தில்தான் நடந்திருக்கிறது. சமூக இடைவெளிபற்றி, ஊருக்குதான் உபதேசம் என்ற என்ற போக்கில் செயல்படுவதை விட்டுவிட்டு, இனியாவது தமிழக அமைச்சர்கள், மக்களுக்கு முன்மாதிரிகளாக நடந்துகொள்ளவேண்டும்.