Skip to main content

சிதம்பரத்தில் பாதாள சாக்கடை திட்டம் கொள்ளையடிக்கும் திட்டமாக மாறியுள்ளது: திமுக முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு

Published on 13/03/2018 | Edited on 13/03/2018
mrk

 

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகர திமுக இளைஞரணி சார்பில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு செவ்வாய்கிழமை சிதம்பரத்தில் ரத்ததான முகாம் நடந்தது.  சிதம்பரம் நகர செயலாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார். இளைஞரணி நிர்வாகிகள் மக்கள் அருள், ரமேஷ், திருமால், பிரபாகரன், முத்துக்குமார், விபின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

 

இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளர் அப்புசத்யநாராயணன் வரவேற்று பேசினார். ரத்த தான  முகாமை முன்னாள் அமைச்சரும் கடலூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளருமான எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தொடங்கி வைத்து பேசினார். நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் ஜேம்ஸ்விஜயராகவன், நகர அவைத்தலைவர் தென்னவன் ஆறுமுகம், முன்னாள் கவுன்சிலர்கள் அப்புசந்திரசேகரன், மணிகண்டன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

 

இந்த முகாமில்  100க்கும் மேற்பட்டவர்கள் ரத்ததானம் செய்தனர். பின்னர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, சிதம்பரம் நகரம் முழுவதும் மாசு பட்டு புழுதியாக காட்சியளிக்கிறது.  சிதம்பரத்தில் நடந்து வரும் பாதாள சாக்கடை பணிகள் முறையாகவும், தரமாகவும் நடக்கவில்லை. லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்லும் சுற்றுலா நகரமான சிதம்பரம் நகரம் புழுதி பறக்கும் நகரமாக உள்ளது. தரமற்ற சாலைகள், உப்புநீராக மாறி போன குடிநீர் ஆகியவற்றால் தகுதியற்றவரை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்து எடுத்துவிட்டோமோ? என வாக்களித்த மக்கள் குற்ற உணர்வில் உள்ளனர்.

 

கொள்ளிடத்தில் தடுப்பணை கட்டப்படாததால் கடல் நீர் உட்புகுந்து உப்பு நீராக மாறிவிட்டது. தரமற்ற பாதாள சாக்கடை திட்டப்பணி ஆகியவற்றை கண்டித்து சிதம்பரம் வர்த்தகர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் ஆட்சியாளர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கடையடையப்பு போராட்டம் நடத்தியுள்ளனர். இந்த ஆட்சியில் அனைத்து பணிகளுக்கும் லஞ்சம் பெறப்படுகிறது. சிதம்பரத்தில் நடைபெறும் பாதளசாக்கடை திட்டம் கொள்ளையடிக்கும் திட்டமாக மாறியுள்ளது. தமிழகத்தில் ஆட்சியே லஞ்சத்தில் இயங்குகின்றது என்றார். 

 

-அ.காளிதாஸ்  

                       
 

சார்ந்த செய்திகள்