
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் 5 பேர் உட்பட அதிமுக நிர்வாகிகள் சிலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டத்தில் ஊராட்சிக்குழு பதவிக்கான தேர்தலில் திமுகவினர் வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டதாகக் கூறி கரூர் வேலுச்சாமிபுரத்தில் அதிமுக சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், தங்கமணி மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் அதிமுக தொண்டர்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கூட்டம் நடத்தியது, அனுமதி இன்றி கூட்டம் நடத்தியது, சட்டவிரோதமாக கூடியது என்ற பிரிவின் கீழ் அமைச்சர்கள் 5 பேர் மற்றும் அதிமுக நிர்வாகிகள் சிலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதற்கான புகாரை கரூர் மாநகர காவல் நிலையத்தில் ஆண்டான் கோவில் கிராம நிர்வாக அலுவலர் ராஜேந்திரன் கொடுத்ததன் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.