Skip to main content

திமுக எம்.பி.க்கள் 4 பேரையும்...அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 3 பேரையும்...டார்கெட் செய்யும் பாஜக!

Published on 21/09/2019 | Edited on 21/09/2019

தி.மு.க. சின்னத்தில் வெற்றி பெற்ற அதன் கூட்டணிக் கட்சி எம்.பி.க்கள் நான்கு பேரின் பதவியை பறிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் போடப்பட்டிருக்கும் பொதுநல வழக்கு அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது பற்றி விசாரித்த போது, நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற கூட்டணி கட்சிகளின் பிரமுகர்களான மதிமுக கணேசமூர்த்தி, விடுதலைச் சிறுத்தைகள் ரவிக்குமார், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சின்ராஜ், இந்திய ஜன நாயகக் கட்சி பாரிவேந்தர் ஆகியோர் தி.மு.க.வின் சின்னமான உதயசூரியன் சின்னத்தில் தேர்தலை சந்தித்து வெற்றி பெற்றார்கள். அதனால் இந்த இவர்களுடைய எம்.பி. பதவியைப் பறிக்க வேண்டும் என்று ’தேசிய மக்கள் சக்தி பெயரில் கட்சி நடத்தும் ரவி என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றை போட்டுள்ளார். 

 

dmk



அதில் தேர்தல் நடத்தை விதிகளின்படி ஒரு கட்சியில் உறுப்பினராக இருப்பவர்கள், மற்றொரு கட்சியின் சின்னத்தில் போட்டியிட முடியாது. அப்படி போட்டியிட்டால் அது சட்ட விரோதம் என்று கூறியுள்ளார்.  இந்த வழக்கில் தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நிரஞ்சனோ, இவர்களின் வேட்பு மனுவைத் தேர்தல் அதிகாரிகள்தான் சரிபார்த்து ஏற்றுக் கொண்டார்கள். அது அவர்களின் சொந்த முடிவு என்று தெரிவித்துள்ளார். அதனால் இந்த வழக்கை தேர்தல் வழக்காக கருத வேண்டும் என்று கூறியுள்ளார். எனவே பொதுநல வழக்காகத் தாக்கல் செய்யப் பட்ட இந்த வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வாதிட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதியரசர்கள் எம்.சத்தியநாராயணா, என்.சேஷசாயி அமர்வோ, வழக்கைத் தள்ளுபடி செய்ய மறுத்து சம்பந்தப்பட்ட எம்.பி.க்களுக்கும் தி.மு.க. தலைமைக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 


  admk



இது பற்றி ரவிக்குமார் எம்.பி.யிடம் நாம் கேட்டபோது, "தேர்தல் விதிமுறைப் படியே நாங்கள் நால்வரும் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருக்கிறோம். எங்கள் மனுவிலோ, வெற்றியிலோ எந்தக் குளறுபடியும் இல்லை என்று கூறினார். மேலும் இது குறித்து திமுக சீனியர்கள் தரப்பில் கேட்டபோது, ரவிக்குமார் உட்பட இந்த நான்கு பேரும் முறைப்படி திமுகவில் உறுப்பினர் கார்டை பெற்று தான் தேர்தலிலே நின்றார்கள். இப்படியெல்லாம் வழக்கு வரும் என்று தெரிந்து தான் எங்கள் கட்சித் தலைமை முன்கூட்டியே கவனமாக செயல்பட்டது என்கிறார்கள். இந்த வழக்கில் அதிரடித் தீர்ப்பு வருமானால், அது சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவின் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்ட தமீமுன் அன்சாரி, நடிகர் கருணாஸ், தனியரசு ஆகியோருக்கும் சிக்கலை ஏற்படுத்தும் என்று ஒரு சிலர் இப்போது கூறிவருகிறார்கள். ஆனால் அந்த மூவர் தரப்பில் கேட்ட போது, "எந்த தீர்ப்பு வந்தாலும் கவலையில்லை. இறுதி முடிவெடுக்க வேண்டியவர் சபாநாயகர் தான் என்று கூறிவருகிறார்கள்.

சார்ந்த செய்திகள்