பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தை அடுத்த கபிஸ்தலம் கிராமத்தில் காவிரியாற்றில் குளிக்கச் சென்ற 6 மாணவர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளனர். இந்த செய்தியைக் கேட்டதும் நான் பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். ஏராளமான கனவுகளுடன் வளர்த்த குழந்தைகளை இழந்து வாடும் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
காவிரிக் கரையில் அமைந்துள்ள புனிதத்தலங்களில் ஒன்றான கபிஸ்தலத்தில் கடந்த காலங்களில் இத்தகைய நிகழ்வுகள் நடந்ததே இல்லை. கபிஸ்தலம் சீதாலட்சுமிபுரத்தைச் சேர்ந்த மாணவர்கள் 7 பேர் நேற்று விடுமுறை என்பதால் அங்குள்ள முனியாண்டவர் கோவில் படித்துறையில் குளிக்கச் சென்றனர். அப்போது ஏற்பட்ட சுழலில் சிக்கி 7 பேரும் காவிரி நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், அவர்களில் சஞ்சய் என்ற மாணவர் மட்டும் நீந்தி தப்பித்து வந்திருக்கிறார். மீதமுள்ள மணிகண்டன், கதிரவன், சிவபாலன், ஸ்ரீநவீன், விஷ்ணுப்பிரியன், வெங்கடேசன் ஆகிய 6 மாணவர்கள் உயிரிழந்து விட்டதாக கூறப்படுகிறது. அவர்களில் இன்னும் இருவரின் உடல்கள் மீட்கப்படவில்லை என்று தெரிய வருகிறது.
காவிரி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு 6 மாணவர்கள் உயிரிழந்த நிகழ்வை விபத்து என்று கூற முடியாது; மாறாக படுகொலை என்று தான் கூற வேண்டும். காவிரி ஆற்றில் இயல்பான நீரோட்டம் இருந்தால் இத்தகைய நிகழ்வு நடந்திருக்க வாய்ப்பே இல்லை. மாறாக, கபிஸ்தலம் முனியாண்டவர் கோவில் படித்துறை அருகே அதிகாரப்பூர்வமற்ற வகையில் மணல் குவாரி அமைக்கப்பட்டு, சட்டவிரோத மணல் கொள்ளை நடந்துள்ளது. இதனால் அப்பகுதியில் பல இடங்களில் 10 அடி ஆழத்திற்கும் கூடுதலாக பள்ளம் ஏற்பட்டிருக்கிறது. அதனாலும், அதன் காரணமாக ஏற்பட்ட நீர் சுழற்சியிலும் சிக்கியதால் தான் 6 மாணவர்களும் உயிரிழந்துள்ளனர். சட்டவிரோத மணல் குவாரிகள் குறித்து அப்பகுதியில் வாழும் மக்கள் பல முறை புகார் அளித்தும் அதன் மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளும், ஆளுங்கட்சி நிர்வாகிகளும், தமிழக அரசும் தான் பொறுப்பேற்க வேண்டும். காவிரி ஆற்றில் தண்ணீர் கரை புரண்டு ஓடும் போதிலும் கூட காவிரி ஆற்றில் பல இடங்களில் மணல் கொள்ளை நடைபெற்று வருகிறது.
காவிரி ஆற்றில் நடக்கும் மணல் கொள்ளைகளால் ஏற்பட்ட பல அடி ஆழ பள்ளங்களிலும், நீர் சுழற்சியிலும் சிக்கி அப்பாவி மக்கள் உயிரிழப்பது இது முதல் முறையல்ல. இதற்கு முன் கடந்த ஆண்டு அக்டோபர் 18&ஆம் தேதி தீப ஒளி திருநாளையொட்டி திருச்சியைச் சேர்ந்த 6 பேர் திருவளர்ச்சோலை பொன்னுரங்கம் பகுதியில் காவிரில் குளித்த போது நீர் சுழற்சியில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தனர். அதேநாளில் கரூர் மாவட்டம் கொடையூரில் அமராவதி ஆற்றில் குளித்த இருவர் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தனர். இந்த இரு நிகழ்வுகளுக்கும் மணல் கொள்ளை தான் காரணம் ஆகும்.
மணல் கொள்ளையால் ஏற்பட்ட பள்ளங்கள் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகளை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். இவற்றுக்கெல்லாம் மேலாக திருச்சி முக்கொம்பு மேலணை இடிந்ததற்கு காரணமும் மணல் கொள்ளை தான். மணல் குவாரிகளால் தமிழகத்தில் ஆட்சியாளர்களைத் தவிர வேறு யாருக்கும் எந்த நன்மையும் இல்லை. மணல் குவாரிகள் மூலம் அரசுக்கு கிடைக்கும் வருமானம் ஆண்டு ரூ.86 கோடி மட்டும் தான். ஆனால், ஆட்சியாளர்களுக்கும், மணல் கொள்ளையர்களுக்கும் ஆண்டுக்கு ரூ.30 ஆயிரம் கோடி வருமானம் கிடைக்கிறது. அதன் காரணமாகத் தான் மக்கள் உயிரிழந்தாலும், கட்டமைப்புகள் சிதைந்தாலும் அதைப்பற்றிக் கவலையில்லை என்று கூறி மணல் கொள்ளையை அரசு ஊக்குவிக்கிறது.
தமிழக ஆட்சியாளர்களுக்கு நீர் மேலாண்மையில் சிறிதும் அக்கறையில்லை என்று உயர்நீதிமன்றம் அண்மையில் கண்டனம் தெரிவித்திருந்தது. அது உண்மை தான் என்று கூறும் வகையில் தான் தமிழக அரசின் செயல்பாடுகள் அமைந்துள்ளன. மோசமான நீர் மேலாண்மைக்கு தலைசிறந்த உதாரணம் தமிழகத்தில் நடைபெறும் மணல் கொள்ளைகளை ஆட்சியாளர்கள் தடுத்து நிறுத்த மறுப்பது ஆகும்.
தமிழகத்தில் இயற்கை வளங்களுக்கும், மனித உயிர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் மணல் கொள்ளைக்கும் உடனடியாக முடிவு கட்டப்பட வேண்டும். தமிழக அரசு இனியாவது திருந்தி காவிரி உள்ளிட்ட ஆறுகளில் செயல்படும் மணல் குவாரிகளை மூட வேண்டும். அதுமட்டுமின்றி, கபிஸ்தலத்தில் காவிரியில் மூழ்கி இறந்த மாணவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.