Skip to main content

திட்டமிட்டபடி பொதுக்குழு... நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்... துணைப் பொதுச்செயலாளர் பதவி உருவாக்கம்! 

Published on 11/07/2022 | Edited on 11/07/2022

 

admk leaders meeting eps and ops

சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் இன்று (11/07/2022) காலை 09.00 மணிக்கு அ.தி.மு.க.வின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் துவங்கியது. இந்த நிலையில், கூட்டத்தில் பங்கேற்பதற்காக, கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள் உள்ளிட்டோர் வந்துள்ளனர். 

 

முதலில் கட்சியின் செயற்குழுக் கூட்டம் நடைபெற்ற நிலையில், பின்னர் பொதுக்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில், பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதில், அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை ஒருமனதாகத் தேர்வு செய்தது பொதுக்குழு. 

 

அதைத் தொடர்ந்து, அ.தி.மு.க. நிரந்தர பொதுச்செயலாளர் பதவிக்கு நான்கு மாதத்தில் தேர்தல் நடத்தவும் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் தேர்தல் நடத்தும் அதிகாரிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 

admk leaders meeting eps and ops

அ.தி.மு.க. பொதுச்செயலாளராக என்னென்ன தகுதி தேவை? 

பொதுச்செயலாளர் பொறுப்பில் போட்டியிட அ.தி.மு.க.வில் 10 ஆண்டு தொடர்ந்து உறுப்பினராக இருக்க வேண்டும். பொதுச்செயலாளராகப் போட்டியிட தலைமைக் கழகப் பொறுப்புகளில் ஐந்து ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும். 

 

அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் பதவி துணை பொதுச்செயலாளராக மாற்றியமைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. துணை ஒருங்கிணைப்பாளராக கே.பி.முனுசாமி இருந்த நிலையில், துணைப் பொதுச்செயலாளர் பதவி உருவாக்கப்பட்டது. நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா என்ற விதி ரத்து செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  

 

கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தை ஓ.பன்னீர்செல்வம் புறக்கணித்து, கட்சியின் தலைமை அலுவலகத்தில் இருக்கும் நிலையில், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களால் ஓ.பி.எஸ். தரப்பு கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது. 

 


 

சார்ந்த செய்திகள்