Skip to main content

ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமாருக்கு ஆதரவாக களத்தில் இறங்கிய பாஜக... பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்!

Published on 30/01/2020 | Edited on 31/01/2020

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கான மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்தபோது, அதனை ஆர்வத்துடன் ஆதரித்தவர் அ.தி.மு.க.வில் இருந்து மக்களவைக்குச் சென்றிருக்கும் ஒரே எம்.பி.யான ரவீந்திரநாத் குமார்.

ஏற்கனவே, முத்தலாக் மசோதாவிற்கு ஆதரவாக வாக்களித்த தற்காக இஸ்லாமிய மக்களின் கோபத்திற்கு அவர் ஆளாகியிருந்தார். அதோடு மத்திய அமைச்சர் பதவிக்காக பா.ஜ.க.காரர் போல மத அடிப்படையில் அவர் பேசிவரும் கருத்துகளை, இஸ்லாமிய மக்கள் ரசிக்கவில்லை. இந்தநிலையில்தான், தேனி மாவட்டம் கம்பத்தில் நடைபெற்ற முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் ஓ.பி.ஆர். கலந்துகொள்ளவிருப்பதாக விளம்பரப் பதாகைகளும், போஸ்டர்களும் ஒட்டப்பட்டன.
 

ops son


இந்தத் தகவலை அறிந்த தேனி மாவட்டத்தில் இருக்கும் இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்தவர்கள், ஓ.பி.ஆருக்கு எதிர்ப்பு தெரிவிக்க, கூட்டத்தில் மறைந்திருந்து தயாராகக் காத்திருந்தனர். இந்தத் தகவல் ஏற்கனவே எஸ்.பி. சாய்சரண் காதிற்குச் சென்றிருந்ததால், 200-க்கும் மேற்பட்ட காக்கிகளை நகர் முழுவதும் பாதுகாப்புப் பணியில் இறக்கியிருந்தார். சரியாக இரவு 9 மணியளவில் பொதுக்கூட் டம் நடந்துகொண்டிருந்த இடத்திற்கு ஓ.பி.ஆர். தனது ஆதரவாளர் களுடன் காரில் வந்துகொண்டிருந்தார். அப்போது திடீரென கூட்டத்திற்குள் இருந்து ஓ.பி.ஆரின் காரை வழிமறித்து கறுப்புக் கொடி காட்டி முற்றுகையிட்ட இஸ்லாமியர்கள், மத்திய பா.ஜ.க. அரசு மற்றும் ஓ.பி.ஆருக்கு எதிராகக் கண்டன முழக்கங்களை எழுப்பினர். மேலும், தாங்கள் வைத்திருந்த கறுப்புக் கொடிகள் கட்டப்பட்டிருந்த தடிகள் மற்றும் செருப்பைக் கொண்டு ஓ.பி.ஆரின் காரைத் தாக்கியதால் அங்கு பரபரப்பு கிளம்பியது. மேலும், ஓ.பி.ஆரின் காரைப் பின்தொடர்ந்து வந்த கம்பம் பி.ஜே.பி. சட்டமன்றப் பொறுப்பாளர் ராஜ்பிரபு காரும் தாக்கப்பட்டது.

உடனடியாக அங்கு குவிந்த காவல் துறையினர், போராட்டக்காரர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி, ஓ.பி.ஆர். மற்றும் அவருக்குப் பின்னால் வந்த வாகனங்கள் செல்ல வழி ஏற்படுத்திக் கொடுத்தனர். இதைத் தொடர்ந்து தனது வாகனம் தாக்கப்பட்டது மற்றும் கறுப்புக்கொடி காட்டப்பட்ட களேபரங்களை முகத்தில் காட்டிக்கொள்ளாமல், பொதுக்கூட்ட மேடையேறி சிரித்தபடி எம்.ஜி.ஆர். புகழைப் பாடிக் கொண்டிருந்தார் ஓ.பி.ஆர். அவர் பேசி முடிப்பதற்குள் மறியல் மற்றும் தாக்குதலில் ஈடுபட்டதற்காக 43 பேரைக் கைதுசெய்து கூட்டிச்சென்றனர் காவல்துறையினர்.

 

bjp

சில நிமிடங்களிலேயே இந்தத் தகவல் தேனி முழுவதும் பரவியது. இதையடுத்து இஸ்லாமிய அமைப்புகளைச் சேர்ந்த சுமார் 300 பேர், தாக்குதலில் கைதுசெய்யப்பட்ட 43 பேரையும் விடுவிக்கக்கோரி, பெரியகுளம் தண்டுபாளையம் பகுதியிலும், தேவதானப்பட்டி -திண்டுக்கல் சாலையிலும் மறியல் போராட்டத்தில் குதித்தனர். இதனால், தேனி -திண்டுக்கல் இடையிலான சாலைப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இன்னொருபுறம், தாக்குதலில் ஈடுபட்டவர்களை உடனடியாகக் கைதுசெய்து, கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, கூடலூர், கம்பம், ஆண்டிப்பட்டி, தேனி, போடி, பெரியகுளம் பகுதிகளில் ர.ர.க்களும் பா.ஜ.க.வின ரும் சாலை மறியலில் குதித்தனர். இவர்களின் போராட்டங்களில் பா.ஜ.க. கொடிகளே அதிகமாகத் தென்பட்டன. ஓ.பி.ரவீந்திரநாத் குமாரின் காரை வழிமறித்து வன்முறைத் தாண்டவம் ஆடிய கயவர்களை வன்மையாகக் கண்டிக்கிறோம். அவர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என பல பகுதிகளில் "ஓ.பி.ஆர். ராணுவம்' என்ற பெயரில் கண்டனப் போஸ்டர்களும் இரவோடு இரவாக ஒட்டப்பட்டுள்ளன.

எஸ்.பி. சாய்சரண் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குவித்த காவல்துறையினரை விட, அதிகமான எண்ணிக்கையில் தேவைப்படும் அளவுக்கு போராட்டம் மாவட்டம் முழுவதும் விஸ்வரூபம் எடுத்தது. ஸ்பாட்டுக்கு வந்த காக்கிகளால் சமாதானப் பேச்சுவார்த்தையைத் தவிர வேறெந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை.

ஏற்கனவே, கடந்தமாதம் பெரியகுளத்தில் இருக்கும் எம்.பி. ரவீந்திரநாத் குமாரின் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்த முஸ்லிம் அமைப்பினர் சுமார் 500 பேர், திடீரென எம்.பி. அலுவலகத்தை நோக்கி படையெடுத்தனர். இந்தத் தகவலைக் கேள்விப்பட்ட பெரியகுளத்து ர.ர.க்கள் தங்களது படையைத் திரட்டி அலுவலகத்தில் காத்திருந்தனர். இதனால், இரு தரப்பினருக்கும் இடையில் மோதல் வெடிக்கும் சூழல் உருவானது. கொஞ்சம் துரிதமாக செயல்பட்ட காவல்துறையினர், இரு தரப்பினரையும் அழைத்து சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இந்த நிலையில்தான் கம்பத்தில் ஓ.பி.ஆருக்கு எதிராக கறுப்புக்கொடி போராட்டம் நடந்திருக்கிறது.

"போராட்டத்திற்கு வாய்ப்பிருப்பது தெரிந்ததுமே, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளாமல் காவல்துறையினர் கோட்டை விட்டதால்தான், கம்பம் முற்றுகைப் போராட்டமும், அதைத்தொடர்ந்து மாவட்டம் முழுவதும் மறியல் போராட்டங்கள் வெடித்தன. இது மாவட்டத்தில் மதக் கலவரங்கள் உருவாகும் வாய்ப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது'' என்று தேனியின் தற்போதைய சூழலை விவரிக்கிறார்கள் இருதரப்புக்கும் பொதுவானவர்கள்.


 

சார்ந்த செய்திகள்