![BJP MPs are protesting in the Parliament complex](http://image.nakkheeran.in/cdn/farfuture/fEOeX8YQTcXu817FBWUhuVcDgAobRo9BlMC5Ue_cens/1719394241/sites/default/files/inline-images/om-birla-lok-simle-art_0.jpg)
நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் தேர்தல் இன்று (26.06.2024) நடைபெற்றது. இதில் பாஜகவின் ஓம் பிர்லா, காங்கிரசின் கொடிக்குன்னில் சுரேஷ் ஆகியோர் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் 18வது மக்களவையின் சபாநாயகராக ஓம் பிர்லா தேர்வு செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து மக்களவையின் சபாநாயகராக தேர்வு செய்யப்பட்ட ஓம் பிர்லாவை பிரதமர் மோடியும், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜுயும் சபாநாயகர் இருக்கையில் அமர வைத்து அவரை வாழ்த்தினர்.
இந்நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி உள்ளிட்ட தலைவர்களின் சிலைகளை இடமாற்றம் செய்தது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி. கேள்வி எழுப்பினார். அப்போது அவரது மைக் ஆப் செய்யப்பட்டதால் அவையில் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் மைக்கின்றி திருமாவளவன் தனது பேச்சை தொடர்ந்தார். எதிர்க்கட்சிகளின் ஆக்கப்பூர்வ விமர்சனங்களை சபாநாயகர் ஓம்பிர்லா பொறுத்துக்கொள்ள மறுப்பதாகவும் புகார் தெரிவித்தனர்.
![BJP MPs are protesting in the Parliament complex](http://image.nakkheeran.in/cdn/farfuture/GS8j6a2uw4IaY6kqH6fcPH-CMv9gAAb3UxelPo6vIqc/1719394261/sites/default/files/inline-images/nda-mp-pro-art.jpg)
அதே சமயம் அவசர நிலை குறித்தும், இந்திரா காந்தியை கண்டித்தும் சபாநாயகர் ஓம்பிர்லா பேசியதால் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சபநாயகராக ஓம் பிர்லா தேர்வு செய்யப்பட்ட முதல் நாளிலேயே ஓம்பிர்லாவின் பேச்சு சர்ச்சையை எற்படுத்தியுள்ளதாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சபாநாயகரை கண்டித்து மக்களவையில் இந்தியா கூட்டணி உறுப்பினர்கள் முழக்கம் எழுப்பினர். அவசர நிலை அமல்படுத்தப்பட்டபோது நடந்தவற்றை பிரதமர் மோடி சுட்டிக்காட்டி கூறியதை சபாநாயகர் ஓம் பிர்லா குறிப்பிட்டதற்கு மக்களவையில் கடும் அமளி ஏற்பட்டது.
நாட்டில் எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்டதற்கு தெரிவித்து மக்களவையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. மேலும் எமர்ஜென்சி கொண்டு வரப்பட்ட நாள் ‘கருப்பு தினம்’ என்றும் மோசமான காலம் என்றும் சபாநாயகர் ஓம் பிர்லா உரையாற்றியதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இதனையடுத்து காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட எமர்ஜென்சியை கண்டித்து பாஜக எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.