மதுரை மாநகராட்சிக்குட்பட்ட எஸ்.எஸ்.காலணி 61வது வார்டில் கடந்த 2011ல் நடைபெற்ற மாநகர் மன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் லட்சுமி. தற்பொழுது நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மதுரை மாநகராட்சி 61வது வார்டில் அதிமுக சார்பில் மீண்டும் போட்டியிட விருப்ப மனு வழங்கிய நிலையில், நேற்று வெளியிடப்பட்ட அதிமுக வேட்பாளர் பட்டியலில் லட்சுமியின் பெயர் இடம்பெறவில்லை. இதனால் அவர் அதிருப்தி அடைந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், பாஜக மாநகர் மாவட்டத் தலைவர் சரவணன் மற்றும் மாநில பொதுச்செயலாளர் சீனிவாசன் முன்னிலையில் லட்சுமி பாஜகவில் இணைந்தார். அதிமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படாததால் இவர் பாஜகவில் இணைந்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், அவர் விரும்பிய 61வது வார்டில் பாஜக சார்பில் லட்சுமி போட்டியிட வாய்ப்பளிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த பாஜக மாநில பொதுச் செயலாளர் சீனிவாசன், “வரலாற்றுச் சிறப்பு மிக்க முடிவை பாஜக தலைவர் அறிவித்துள்ளார். தமிழகம் எதிர்பார்த்து காத்திருந்த முடிவு. தொண்டர்களின் உணர்வைப் புரிந்து கொண்டு முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தனித்து போட்டியிடும் முடிவை பாஜக தொண்டர்கள் வரவேற்கின்றனர். பாஜகவின் பலம் எவ்வளவு அதிகரித்துள்ளது என்பதை தமிழகம் அறிய வேண்டும் என்பதற்கான தேர்தலாக இந்தத் தேர்தல் அமையும். எங்களுக்கு எப்பொழுதும் பொது எதிரி திமுகதான். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பாஜக பெறும். அதிமுக மட்டுமல்ல திமுகவில் இருந்தும் பாஜகவில் இணைய பலரும் தயாராக உள்ளனர்” என்று தெரிவித்தார்.