அண்மையில் திருக்கோயில்களைப் பாதுகாத்திட வலியுறுத்தி கோவை இஸ்கான் கோவிலில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், ''நான் வீட்டுக்குத் தீபாவளி ஸ்வீட் வாங்க வேண்டும் என்பதற்காக நம்ம ஊரில் இருக்கக்கூடிய சாதாரணமான அண்ணா கடைக்குப் போய் 'அண்ணா ஸ்வீட் கொடுங்க அரைக்கிலோ' என்று கேட்டேன். அவரிடம் கேட்டேன் எவ்வளவு டர்ன் ஓவர் பண்றீங்க என்று, அதற்கு அவர், 'நான் ஒரு நாளைக்கு 3000 ரூபாய்க்கு டர்ன் ஓவர் பண்ணுவேன்' என்றார். அதே நேரத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் 100 கோடி ரூபாய்க்கு மேல் எந்த கம்பெனி டர்ன் ஓவர் செய்கிறதோ அங்குதான் நாங்க தீபாவளி ஸ்வீட் வாங்குவோம் என்று சொல்கிறார். 100 கோடி ரூபாய்க்கு டர்ன் ஓவர் நடக்கிறதா என்று யார் கேட்பார்கள் என்றால், கார்ப்ரேட் பாலிடிக்ஸ் நடத்த வேண்டும் என்று நினைப்பவர்தான் கேட்பார்கள். அதனால் தமிழ்நாடு ஸ்டேட் டிரான்ஸ்போர்ட் கார்ப்பரேஷன் எதற்காக தீபாவளி பண்டிகைக்கு ஸ்வீட் கொடுப்பதற்கு 100 கோடிக்கு டர்ன் ஓவர் செய்கின்ற கம்பெனிகளில்தான் ஸ்வீட் வாங்குவேன் என்று சொல்ல காரணம் கரப்ஷனா, பல்க் கமிஷனா, கட்டு மணியா என்பதை முதலமைச்சர் பார்க்க வேண்டும்.
தமிழகத்தில் இருக்கக்கூடிய மின்சாரத்துறை அமைச்சருக்கு நிலக்கரியைப் பற்றி பேசுவதற்கு எந்த ஒரு உரிமையும் கிடையாது. ஏனென்றால் நிலக்கரி காண்ட்ராக்ட்டை கேன்சல் பண்ணிவிட்டு எக்ஸ்டெண்ட் பண்ணாம இருக்கிறார்கள். 20 ரூபாய்க்கு மின்சாரத்தை வாங்கவில்லை என்று சொல்லிவிட்டு, இப்பொழுது 20 ரூபாய்க்கு மின்சாரத்தை வாங்கியதாக கதை சொல்கிறார்கள். டி.என்.இ.பி தமிழக மக்களுக்கு மின்சாரம் பெற வேண்டும் என்பதற்காக இல்லை தமிழகத்தில் இருக்கக்கூடிய அமைச்சருக்கு கமிஷன் வருவதற்காக ஒரு நிறுவனம் இயங்குகிறது என்றால் அது டி.என்.இ.பி. எனக்கும் ரொம்ப ஆச்சரியம், வந்த புதிதில் அணில் மேல பழி போட்டார்கள். மின்சாரம் போனதற்கான காரணம் இவர்கள் பிரைவேட் பவர் பர்சேஸ் அக்ரிமெண்ட் போடுவதற்காக டி.என்.இ.பியை பயன்படுத்தினார்கள் என்பது மட்டும்தான். நிச்சயமாக இந்தியாவில் நிலக்கரி தட்டுப்பாடு கிடையாது.
பிஜேபியை எவ்வாறு ஹேண்டில் செய்ய வேண்டும் என தெரியும் என்று ஒரு அமைச்சர் சொல்கிறார். தொட்டு பார்க்கட்டும். 17 மாநிலத்தில் ஆட்சியில் இருக்கிறோம். மோடிஜி டெல்லியில் இருக்காரு. தொடுவார்கள் என்று காத்திருக்கிறோம். தொட்டுப் பார்க்கட்டும். திமுக பாஜக மீது கை வைத்தால் வட்டியும் முதலுமாகத் திருப்பிக் கொடுக்கப்படும். இப்போதாவது தமிழக முதல்வர் விழித்துக்கொள்ள வேண்டும்'' என்றார்.