தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் ஜூன் 28 வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. இந்தக் கூட்டத்தொடரில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது. முதல் நாளான 28ஆம் தேதி முன்னாள் எம்எல்ஏக்கள் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு அவை அன்றைய தினம் ஒத்திவைக்கப்படும். இதனையடுத்து அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம், அதிமுக தலைமை அலுவலகத்தில் காலை 11.30 மணிக்கு நடைபெற உள்ளது.
இந்தநிலையில் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் கலந்து கொள்வீர்களா என நாம் கேட்டதற்கு, கூட்டத் தொடரில் கலந்து கொள்வோம். அதிமுக எம்எல்ஏக்கள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு வரவில்லை. ஆகையால் அதில் கலந்துகொள்ள இயலாத நிலை உள்ளது. சபாநாயகர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரும் விசயத்தில் அதிமுக கொறடா உத்தரவுபடி செயல்படுவோம் என கலைச்செல்வன், இரத்தின சபாபதி ஆகியோர் தெரிவித்தனர்.
டிடிவி தினகரன் - தங்க தமிழ்செல்வன் மோதல் குறித்த கேள்விக்கு, கருத்து சொல்ல ஒன்றும் இல்லை என்று கலைச்செல்வன் தெரிவித்தார். ஒ.பன்னீர்செல்வம் பிரிந்த காலத்திலேயே அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும், ஜெயலலிதா அமைத்து கொடுத்த ஆட்சியை வெற்றிக்கரமாக நடத்த வேண்டும் என்று கூறிவருகிறேன் என்றார் இரத்தின சபாபதி.
கட்சிக்கு விரோதமாக செயல்பட்டதாக கூறி, அதிமுக எம்எல்ஏக்கள் கலைச்செல்வன், ரத்தினசபாபதி, பிரபு ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி அதிமுக கொறடா ராஜேந்திரன் சபாநாயகரிடன் புகார் அளித்தார். இந்த இந்த விவகாரம் குறித்து 7 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என 3 எம்.எல்.ஏ-க்களுக்கு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பி இருந்தார். சபாநாயகரின் நடவடிக்கைக்கு தடை விதிக்க கோரி, ரத்தின சபாபதி மற்றும் கலைச்செல்வன் ஆகியோர், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் சபாநாயகர் தனபால் அனுப்பிய நோட்டீஸூக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. இடைக்கால தடை பிரபுவுக்கும் பொருந்தும் என்று சட்டப்பேரவை செயலகம் தெரிவித்துள்ளது.