Skip to main content

48 மணி நேரத்தில் நடக்கப் போவது என்ன? - அண்ணாமலை vs மனோ தங்கராஜ்

Published on 25/11/2023 | Edited on 25/11/2023

 

Annamalai Minister Mano Thangaraj has had a  conflict

 

கடந்த நாற்பது ஆண்டுகளாகப் பயன்பாட்டில் இருக்கும் பச்சை நிற பாக்கெட் பால் விற்பனையைத் தமிழ்நாடு அரசின் ஆவின் பால் நிறுவனம் நிறுத்திக் கொள்வதாகவும், அதற்குப் பதிலாக பச்சை நிற பாக்கெட் பாலைவிட 1 சதவீதம் கொழுப்புச் சத்து குறைவான ஊதா நிற பாக்கெட் விற்பனையை அதிகரிக்கப்போவதாகவும் தகவல்கள் வெளியானது. இதற்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். 

 

அந்த வகையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது சமூக வலைத்தள பக்கத்தில், “மொத்தமாக சென்னையில் சுமார் 14.75 லட்சம் லிட்டர் விற்பனையாகும் ஆவின் பாலில், 40% பங்குள்ள, 4.5% கொழுப்புச் சத்துள்ள பச்சை நிற பாக்கெட் பால் விற்பனையை நிறுத்திவிட்டு, 3.5% கொழுப்பு சத்துள்ள ஊதா நிற பாக்கெட் பால் விற்பனை செய்ய முடிவெடுத்திருப்பது, பொதுமக்களை ஏமாற்றும் செயல் ஆகும். ஏற்கனவே 6% கொழுப்புச் சத்து இருக்க வேண்டிய ஆரஞ்சு நிற பாக்கெட் பாலில், 4.79% கொழுப்புச் சத்தே இருக்கிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அந்த பதிவில் ஒரு ஆய்வகப் பரிசோதனை அறிக்கை ஒன்றையும் இணைத்திருந்தார்.

 

ஆனால் அண்ணாமலையின் குற்றச்சாட்டிற்கு மறுப்பு தெரிவித்த தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், “பச்சை நிற பாக்கெட் பசும்பாலில் கூடுதலாக 1 சதவீதம் கொழுப்பு சேர்த்து பதப்படுத்தி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அறிவியல் பூர்வமாக பார்த்தால் ஆவின் நீண்ட காலமாக வழங்கி வரும் பச்சை நிற நிலைப்படுத்தப்பட்ட பாலில் உள்ள கூடுதல் கொழுப்புச்சத்து இன்றைய வாழ்க்கைத் தரத்துக்கு தேவையற்ற ஒன்றாகும். கூடுதலாக கொழுப்பு அல்லது புரதம் உள்ளிட்டவைகளை சேர்ப்பதை பல வாடிக்கையாளர்கள் விரும்புவதில்லை. பசும்பாலில் சராசரியாகக் கிடைக்கும் 3.3% கொழுப்பு அளவிலேயே மக்களுக்குத் தரமான பசும்பால் வழங்கும் நோக்கத்தோடு 3.5% கொழுப்புடன் விதிமுறைகளுக்குட்பட்டு செறிவூட்டி ஊதா நிற பாக்கெட்டுகளில் வழங்கி வருகிறோம். ஆவின் நிறுவனம் எவ்வித லாபநோக்கமும் இல்லாமல் நுகா்வோரின் நலனை மட்டுமே முன்னிலைப்படுத்தி இயங்கிறது. ஆனால் சிலர் வட மாநிலங்களில் உள்ள நிறுவனங்களை தமிழகத்துக்கு கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தோடு, அவர்களிடம் கையூட்டு பெற்று ஆவின் நிறுவனத்துக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசி வருகின்றனர்” என்றார்.  

 

இதனைத் தொடர்ந்து அண்ணாமலை தனது எக்ஸ் சமூக வலைத்தள பக்கத்தில், “வட மாநில பால் உற்பத்தி நிறுவனங்களிடம் கையூட்டு பெற்று ஆவின் நிறுவனத்திற்கு எதிராக நான் செயல்படுவதாகக் குற்றம் சாட்டியிருந்தீர்கள். உங்களுக்கு 48 மணிநேரம் அவகாசம் தருகிறேன்.  ஊழல் திமுக அரசின் முழு கட்டுப்பாட்டில் உள்ள தமிழக காவல்துறை மூலமாக விசாரித்து, நீங்கள் முன்வைத்த குற்றச்சாட்டிற்கான ஆதாரங்களைப் பொதுவெளியில் வெளியிட வேண்டும். உங்களால் நிரூபிக்க முடியவில்லையெனில், தவறான தகவலை பகிர்ந்தமைக்கு மன்னிப்பு கோரி, உங்கள் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். நீங்கள் அமைச்சராக தொடர்வது, தமிழக மக்களுக்கும் ஆவின் நிறுவனத்திற்கும் பெரும் சாபக்கேடு” என்று விமர்சித்திருந்தார். 

 

இந்த பதிவிற்கு பதிலளித்த அமைச்சர் மனோ தங்கராஜ். “ரபேல் வாட்சு கட்டி ஆடு மேய்ப்பவரின் கதையைத்தான் கூறினேன். தம்பி அண்ணாமலை அவசரப்பட்டு முன்வந்து, நான்தான் அந்த ‘வடநாட்டு கைக்கூலி அண்ணாமலை’ என்று கூறுவது ஏனோ? குற்றமுள்ள நெஞ்சம் குறுகுறுக்கும். மன்னிப்பு கேட்காவிட்டால் என்ன, தலையை சீவி விடுவாயா? 48 மணி நேரம்... மிரட்டலா? எனது கருத்தில் எள்ளளவும் மாற்றம் இல்லை. ஏனெனில் அது ஆதாரத்துடன் கூடியது. இது தமிழ்நாட்டு மக்கள் மற்றும் பால் உற்பத்தியளர்களின் நலன் சார்ந்தது. மன்னிப்பு கேட்க நாங்கள் ஒன்றும் சாவர்க்கர் பரம்பரை அல்ல! பெரியாரின் பேரன்கள்; கலைஞரின் உடன்பிறப்புகள்; தளபதியின் தம்பிகள்; தமிழ்நாட்டு மக்களுக்காக உழைப்பவர்கள்” எனத் தெரிவித்துள்ளார். 

 

இந்த நிலையில் அண்ணாமலை வெளியிட்ட பதிவில், “கூறிய அவதூறுக்கு ஆதாரம் இருக்கிறதா என்று கேட்டால், வழக்கம் போல நான் அவர் பேரன், இவர் தம்பி என்ற கம்பி கட்டும் கதை எல்லாம் கூறிக்கொண்டிருக்கிறார் அமைச்சர் மனோ தங்கராஜ். நீதிமன்றத்தில் இந்தக் கதை எல்லாம் செல்லாது என்பதை பல நீதிமன்றங்களில் மன்னிப்பு கேட்ட வரலாறு உள்ள அவரது உடன்பிறப்பிடமோ, அண்ணனிடமோ கேட்டுத் தெரிந்து கொண்டிருந்திருக்கலாம். 

 

ஏற்கனவே, பிரதமர் மோடியை மிகவும் தரம் தாழ்ந்த முறையில் விமர்சித்து விட்டு, பின்னர் பொதுமக்கள் எதிர்ப்புக்குப் பயந்து பதிவை நீக்கியது போல, அவதூறு வழக்குக்குப் பயந்து கீழ்க்கண்ட இந்த பதிவை நீக்கிய கோழை நீங்கள் வீரம் பேசுவது நகைச்சுவை. ஆதாரமற்ற குற்றச்சாட்டை பரப்பிய உங்கள் மீது 1 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கோரி வழக்கு தொடரவுள்ளேன். அந்த ஒரு கோடி ரூபாய் பணம், ஆவின் நிறுவனத்திற்குப் பால் கொடுக்கும் நமது தமிழக விவசாயிகளின் மேம்பாட்டு நிதியாக ஆவின் நிறுவனத்திற்கு வழங்கப்படும். உங்களை போன்ற ஒரு அமைச்சர் தமிழகத்தின் சாபக்கேடு” எனக் குறிப்பிட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்