இலங்கையில் நிகழும் தொடர் அரசியல் மாற்றங்கள், ஈழத்தமிழர் மத்தியிலும் தமிழர்கள் மத்தியிலும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதனிடையே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன, அவர்களின் ஆதரவு யாருக்கு என்றெல்லாம் பல அரசியல் கட்சிகளின் கேள்விகளாகவும், பொதுமக்களின் சிந்தனையாகவும் இருந்துவந்தது. இந்த நிலையில் இலங்கையில் நடந்த இனப்படுகொலைக்கு எதிராகத் தொடர்ந்து போராடிவரும் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியிடம் பேசினோம். அவருடனான நீண்ட உரையாடலில், தமிழ் தேசியக் கூட்டமைப்பைப் பற்றிய தன் கருத்தை தெரிவித்தார்.
"தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக இருக்கக் கூடிய திரு. சம்பந்தனும், திரு. சுமந்திரன் அவர்களும் அமெரிக்கா மற்றும் இந்தியாவின் கூட்டாளிகளாகத்தான் செயல்படுகிறார்கள். அவர்கள் தமிழர்களின் நலனுக்காக செயல்படவில்லை. அவர்களும் தொடர்ச்சியாக மக்களின் எதிர்ப்புகளை சந்தித்து கொண்டுதான் வருகிறார்கள். தமிழீழப் பகுதியில் திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் அனந்தி சசிதரன் போன்றவர்களெல்லாம் பேசுகிறார்கள். இவர்கள் எல்லாம் களத்தில் இறங்கியும் போராடுகிறார்கள். இதில் மிக முக்கியமான ஆற்றலாக நாங்கள் பார்த்தது யாழ்ப்பாண மாணவர்கள். இந்த மாதிரி கூட்டமைப்புத்தான் அங்கு அரசியலுக்கு வரவேண்டும். மாறாக சந்தர்ப்பவாதிகளாக இருக்கும் சம்பந்தனும் சுமந்திரனும் வருவது தமிழருக்கு பின்னடைவு கொடுக்கும். இவர்களெல்லாம் புறக்கணிக்கப்பட வேண்டியவர்கள். அங்கே அரசியல் கட்சிகளை தாண்டி ஒரு இயக்க அரசியல் தேவைப்படுகிறது அந்த இயக்க அரசியல்தான் இந்தத் திட்டங்கள் எல்லாம் எதிர்த்து நிற்கிறது. தேர்தலில் ஓட்டு வாங்க கூடிய கட்சியோ அதிகாரத்தை பங்கு போட்டுக்கொள்ளும் கட்சியோ செய்யாது. ஒரு இயக்க அரசியல் இந்த பிராந்தியத்தில் வலுப்பெற்றால்தான் நமக்கான குறைந்தபட்ச பாதுகாப்பு கிடைக்கும். என்ன நடக்கிறது என்பதை நம்மால் விவாதிக்க முடியும். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க முடியும்."