"நான் என்றுமே வணங்கும் என் அக்கா ஜெயலலிதாவின் எண்ணத்துக்கு இணங்க, அவர் கூறியபடி இன்னும் நூறாண்டுகளுக்கு மேலாக தமிழகத்தில் ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சித் தொடர ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளான, ஜெயலலிதாவின் உண்மைத் தொண்டர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஒற்றுமையுடன் வரும் தேர்தலில் பணியாற்றிட வேண்டும்.
நம்முடைய பொது எதிரி, ‘தீயசக்தி’ என்று ஜெயலலிதா நமக்குக் காட்டிய, தி.மு.க.வை ஆட்சியில் அமரவிடாமல் தடுத்து, விவேகமாக இருந்து ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி தமிழகத்தில் நிலவிட அவரின் தொண்டர்கள் பாடுபட வேண்டும்.
என் மீது அன்பும், அக்கறையும் காட்டிய ஜெயலலிதாவின் உண்மைத் தொண்டர்களுக்கும், நல்ல உள்ளங்கள் அனைவருக்கும் என் உளப்பூர்வமான நன்றிகள். ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது, எப்படி அவர் எண்ணத்தைச் செயல்படுத்தும் சகோதரியாக இருந்தேனோ, அவர் மறைந்த பிறகும் அப்படித்தான் இருக்கிறேன்.
நான் என்றும் பதவிக்காகவோ, பட்டத்துக்காகவோ, அதிகாரத்துக்காகவோ ஆசைப்பட்டதில்லை. ஜெயலலிதாவின் அன்புத் தொண்டர்களுக்கும், தமிழக மக்களுக்கும் நான் என்றென்றும் நன்றியுடன் இருப்பேன்.
நான் அரசியலை விட்டு ஒதுங்கி இருந்து ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி அமைய, நான் என்றும் தெய்வமாக வணங்கி வரும் என் அக்கா ஜெயலலிதாவிடமும், எல்லாம் வல்ல இறைவனிடமும் பிரார்த்தனை செய்துகொண்டே இருப்பேன்" என சசிகலா 03.03.2021 அன்று அறிக்கை வெளியிட்டார். இது அதிமுக மற்றும் அமமுகவில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் அமமுகவில் இருந்து விலகுவதாக மதுரை நகர் தெற்கு மாவட்ட எம்ஜிஆர் மன்றச் செயலாளர் வி.கே.சாமி தலைமையிலான நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். மேலும் அவர்கள் கூறியதாவது, “இந்த மன்றத்தில் இருப்பவர்கள் அனைவரும் எம்ஜிஆர் சினிமாவில் நடிக்க துவங்கிய காலம் முதல் இருக்கின்றனர்.
எம்ஜிஆர் வழியில் வந்த எங்களுக்கும், திமுக ஆட்சிக்கு வரக்கூடாது என்பதுதான் நோக்கம். ஜெயலலிதா ஆட்சி அமைய அமமுகவில் இணைந்தோம். ஆனால் சசிகலா திடீரென அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்துள்ளார். மேலும் ஜெயலலிதா ஆட்சி அமைய விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
சசிகலாவின் விருப்பத்தை நிறைவேற்ற அமமுகவால் முடியாது. எனவே அமமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்து பணியாற்ற விரும்புகிறோம். இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு கடிதம் அனுப்பியுள்ளோம். அவர்களிடம் இருந்து பதில் வரும் என்று நம்புகிறோம்” என்றனர்.