Skip to main content

‘அம்மா திமுக’ தொடங்குகிறாரா ஓபிஎஸ்? விரைவில் சுற்றுப்பயணம்?? அடுத்த நடவடிக்கை என்ன??? 

Published on 24/02/2023 | Edited on 24/02/2023

 

“Amma DMK is starting OPS? Tour soon?” As for the next step?

 

கடந்த வருடம், ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு குறித்த வழக்கில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பினை எதிர்த்து, ‘பொதுக்குழு செல்லாது’ என அறிவிக்கக் கோரி ஓபிஎஸ் தரப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் அடங்கிய அமர்வு இந்த வழக்கில் தீர்ப்பை ஒத்தி வைத்திருந்தது. மேலும், ஈரோடு இடைத்தேர்தல் தொடர்பாக அதிமுக வேட்பாளரை தேர்வு செய்ய அறிவுறுத்தல் ஒன்றையும் கொடுத்திருந்தது. அதன்படி அதிமுக வேட்பாளரை எடப்பாடி பழனிசாமி தரப்பு அறிவித்து தீவிரமாகப் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில், நேற்று பொதுக்குழு தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

 

இந்த தீர்ப்பினை உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் தினேஷ் மகேஷ்வரி, சஞ்சய் குமார் அமர்வு வாசித்தது. அதில், உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும், ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

 

இந்நிலையில் இந்த தீர்ப்பு குறித்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய அவர்கள், “மாவட்ட நீதிமன்றத்தில் ஒரு வழக்கு இருந்து அதன் தீர்ப்பு வழக்கு தொடுத்தவருக்கு திருப்திகரமாக இல்லை என்றால் அவர் தொடர்ந்து உயர் நீதிமன்றத்திற்கு செல்வார். உயர்நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பிலும் அவருக்கு திருப்தி இல்லை என்றால் நீதிபதிகள் அமர்வுக்கு அனுப்புவார்கள். அதிலும் திருப்தி இல்லை என்றால் உச்ச நீதிமன்றத்திற்கு அனுப்புவார்கள். அரசியல் ரீதியில் உச்சநீதிமன்றத்திலும் எதிர்பார்த்த தீர்ப்பு இல்லை என்றால் நாங்கள் மக்களை நாடிச் செல்லும் நிலையில் இருக்கிறோம். நாங்கள் அம்மா திமுக கட்சியை நாங்கள் துவங்கப்போவதாக சொல்கிறார்கள். பைத்தியக்காரர்கள் யாராவது தான் அப்படி சொல்லுவார்கள். அதற்கு நாங்கள் பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை. 50 ஆண்டுகாலம் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா உயிரைக் கொடுத்து காத்த கட்சி. அவர்கள் உருவாக்கிய சட்டவிதியைத்தான் நாங்கள் காப்பாற்ற போராடி வருகிறோம். 30 ஆண்டுகாலம் ஜெயலலிதா பொதுச்செயலாளராக இருந்துள்ளார். அவர் நிரந்தர பொதுச்செயலாளராக இருக்க வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றினோம். அதை ரத்து செய்ய யாருக்கும் அதிகாரம் கிடையாது.

 

ஓபிஎஸ்ஸோட தாத்தாவும் இபிஎஸ்ஸோட தாத்தாவும் ஆரம்பித்த கட்சி அல்ல. தொண்டர்களுக்காக எம்.ஜி.ஆர். ஆரம்பித்த கட்சி. இதற்காகத் தான் உச்சநீதிமன்றத்தில் போராடினோம். இப்பொழுது மக்கள் மன்றத்தில் போராட இருக்கிறோம். தீர்ப்பு வந்ததில் எங்களுக்கு எந்தவிதமான பின்னடைவும் இல்லை. கோடநாடு வழக்கு, தங்கமணி மேல் போட்ட வழக்கு எல்லாம் என்ன ஆனது. அவர்கள் தான் திமுகவின் பி டீம். ஓபிஎஸ், சசிகலா, டிடிவி இவர்களை கட்சிக்குள் சேர்க்க மாட்டோம் என்கிறார்.இவர் ஆரம்பித்த கட்சியா. ஆணவத்தின் உச்ச நிலையில் முடிவு செய்து கொண்டு உள்ளார். 

 

கூடிய விரைவில் மாவட்டம் வாரியாக மக்களை சந்திக்கிற பணி துவங்கும். மக்களை சந்தித்து நியாயம் கேட்போம். நியாயத்தின், தர்மத்தின் வழி நின்று நியாயத்தை கேட்போம். வழக்கு நடந்து கொண்டு இருந்ததால் அதில் கவனம் செலுத்த முடியவில்லை. சசிகலா, தினகரன் சந்திப்பு இதுவரை நடக்கவில்லை. அதற்கு ஒரு காரணமும் இல்லை. கூடிய விரைவில் அந்த சந்திப்பு நிகழும்” எனக் கூறினார். 

 


 

சார்ந்த செய்திகள்