இந்தியாவில் அரசியல் சாசனம் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் வகையில் நாடாளுமன்றத்தில் உள்ள இரு அவைகளிலும் கடந்த 4 நாட்களாக சிறப்பு விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், வயநாடு எம்.பி. பிரியங்கா காந்தி, பிரதமர் மோடி உள்ளிட்ட பலர் பேசினர்.
இந்த விவாதத்தின் முடிவில் மாநிலங்களவையில், நேற்று (17.12.2024) மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார். அப்போது அவர், “அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர் என்று சொல்வது இப்போது ஒரு ஃபேஷன் ஆகிவிட்டது. இதற்குப் பதிலாக, கடவுளின் பெயரை இவ்வளவு சொல்லியிருந்தால், அவர்களுக்குச் சொர்க்கத்திலாவது இடம் கிடைத்திருக்கும். அம்பேத்கரின் பெயரைக் காங்கிரஸ் எடுத்துக்கொள்வதில் பா.ஜ.க மகிழ்ச்சியடைகிறது. ஆனால் அவர் மீதான உண்மையான உணர்வுகள் குறித்தும் காங்கிரஸ் கட்சி பேச வேண்டும்” என்று பேசினார்.
அம்பேத்கர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் அமித்ஷா பேசியதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதே சமயம் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, பிரியங்கா காந்தி, திமுக எம்.பி. டி.ஆர்.பாலு உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சியினர், மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு கண்டனம் தெரிவித்து கையில் அம்பேத்கர் புகைப்படம் ஏந்தி நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினர். மேலும், எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ‘ஜெய் பீம்’ என முழக்கமிட்டனர். இதையடுத்து இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.
அமித்ஷாவின் பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் விசிக தலைவர் திருமாவளவன் இந்த விவகாரத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், 'அமித்ஷாவின் பேச்சு அவர் எந்த அளவிற்கு அம்பேத்கர் மீதும் அவர் வகுத்தளித்த அரசியலமைப்புச் சட்டத்தின் மீதும் வெறுப்பில் இருக்கிறார் என்பதை உறுதிப்படுத்துகிறது. புரட்சியாளர் அம்பேத்கர் வாழ்ந்த இடத்தில் ஒரு சர்வதேச நினைவிடத்தை எழுப்பிய வரலாற்றை பெருமையோடு சொல்கிறார்கள். அதைப்போல மும்பையில் உள்ள அவர் எரியூட்டப்பட்ட தலத்தை புதுப்பித்து இருக்கிறார்கள். அம்பேத்கருக்கு 400 அடியில் சிலைகள் எழுப்ப போகிறோம் என்பதையெல்லாம் பெருமையாக சொல்கிறார்கள். இப்படி ஒருபுறம் அம்பேத்கர் அவர்களின் பெருமை பேசிக்கொண்டே இன்னொரு புறம் அவருடைய கனவை சிதைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக அம்பேத்கர் வகுத்தெளித்துள்ள சட்டத்தை நீர்த்துப்போகும் அனைத்து வேலைகளையும் செய்து வருகிறார்கள். அம்பேத்கர் விஸ்வரூபம் எடுக்கிறார் சனாதனிகளின் சதி முயற்சிகள் சாம்பலாகும். அம்பேத்கரை நாடே பேசுகிறது என்பதை சாவர்க்கரின் வாரிசுகளால் எப்படி பொறுத்துக் கொள்ள முடியும். தனது முகத்திரையை தானே கிழித்துக் கொண்டார் அமித்ஷா'' என தெரிவித்துள்ளார்.