ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாளான இன்று அதிமுகவின் வேட்பாளர் மனுத் தாக்கல் செய்தார்.
இடைத்தேர்தலில் ஏற்கனவே திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ். இளங்கோவன் வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில், அதிமுக சார்பில் எடப்பாடி அணி வேட்பாளராக தென்னரசு அறிவிக்கப்பட்டார். பன்னீர்செல்வம் அணி சார்பில் செந்தில் முருகன் அறிவிக்கப்பட்டதோடு செந்தில் முருகன் வேட்பு மனுவை ஏற்கனவே தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில் ஆறாம் தேதி திங்கட்கிழமை ஓபிஎஸ் அணி வேட்பாளர் வாபஸ் பெறுவதாக அறிவிக்கப்பட்டதன் பிறகு இன்று மதியம் 12 மணிக்கு எடப்பாடி அணி வேட்பாளரான ஈரோடு முன்னாள் எம்எல்ஏ தென்னரசு தனது வேட்பு மனுவை தேர்தல் நடத்தும் அலுவலரான மாநகராட்சி ஆணையாளர் சிவக்குமாரிடம் தாக்கல் செய்தார்.
இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர் கே.வி. ராமலிங்கம், பகுதி செயலாளர் பெரியார் நகர் மனோகரன், பாவை அருணாச்சலம், தமாகா இளைஞரணி தலைவர் யுவராஜா ஆகியோரும் உடன் இருந்தனர். ஒரு வழியாக அதிமுக வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில் தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டது.