திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவரும் கட்சியின் பொருளாளருமான டி.ஆர்.பாலு எழுதிய பாதை மாறா பயணம் புத்தக வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்தப் புத்தகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
இந்நிகழ்வில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “பாலு கலைஞருக்கு அப்போது கார் ஓட்டிக்கொண்டு இருந்தார். கார் ஓட்டிக் கொண்டிருந்த பாலுவையும் கைது செய்து சிறையில் அடைத்தார்கள். பிப்ரவரி ஒன்றாம் தேதி நாங்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், பாலு கைதானது மே மாதம் ஆறாம் தேதி. நாங்கள் அடிபட்டு, ரத்தம் சிந்தி, மிதிபட்டு பல கொடுமைகளைச் சந்தித்தோம். இனி யாரையும் அடிக்கப் போவதில்லை எனக் காவலர்கள் முடிவெடுத்த பிறகு தான் பாலு சிறைக்கு வந்தார். பாலு சிறைக்கு வரப்போகிற தகவல் எங்களுக்கு கிடைத்துவிட்டது. வரப்போகும் பாலுவை நாங்கள் எப்படி வரவேற்பது என்று திட்டம் போட்டோம்.
சிறையில் மரத்தில் இருந்த இலைகளை எல்லாம் பறித்து அந்த இலைகளை ஒரு நாறில் கட்டி எல்லாரும் சேர்ந்து பாலுவை வருக வருக என வரவேற்று மாலை போட்டு உள்ளே அழைத்தோம். எங்களுக்கு சிறை பழகிவிட்டது. ராயப்பேட்டையில் நாங்கள் எப்படி இருந்தோமோ அதே போல தான் சிறையிலும் நாங்கள் ஒன்றாக இருந்தோம். சிறையில் நாங்கள் அண்ணா, கலைஞர் போன்றோரின் பிறந்தநாள், முப்பெரும் விழா போன்ற தினங்களில் விழாக்களை நடத்தினோம் பேச்சுப்போட்டி, விளையாட்டுப் போட்டி எல்லாம் நடத்தினோம்.
நான் கட்சிக் கூட்டத்திற்கு செல்லும் பொழுது எனக்கு துணையாக பாலுவைத்தான் அழைத்துக் கொண்டு செல்வேன். அந்தக் கூட்டத்தில் எனக்கு வழிச்செலவிற்கு பணம் கொடுப்பார்கள். அதில் பாதி நான் பாலுவிற்கு கொடுத்து விடுவேன். 5000 ரூபாய்க்கு கார் ஒன்றை வாங்கினேன். சிறிது தினங்களில் விபத்து நடந்து விட்டது. ஐந்தாயிரம் ரூபாய்க்கு வாங்கி 7 ஆயிரம் ரூபாய்க்கு செலவு செய்தேன். விபத்து ஏற்பட்டவுடன் வண்டியை விற்று விடலாம் என்று முடிவு செய்த போது அதை நான் வாங்கிக் கொள்கிறேன் என பாலு கேட்டார். எவ்வளவு கொடுக்க வேண்டும் எனக் கேட்டார். அதற்கு நான், வாங்கியது ஐந்தாயிரம் செலவு செய்தது 7 ஆயிரம் மொத்தம் 12000 போதும் என்று கேட்டேன்.
உடனே அதை ஏற்றுக்கொண்டு 100 ரூபாய் அட்வான்ஸ் கொடுத்தார். அதன் பிறகு சுத்தமாக அதை மறந்துவிட்டார். இரண்டு மாதங்கள் கழித்து மீண்டும் ஒரு நூறு ரூபாய் கொடுத்தார். மொத்தத்தில் பாலு இதுவரை 2000 ரூபாய் தான் கொடுத்திருப்பார். ஆக, இன்று வரை அவர் என் கடன்காரராகத் தான் இருக்கிறார். இப்படி எங்கள் நட்பு இன்றும் ஒட்டிக்கொண்டு உள்ளது. இது தான் திமுக” எனப் பேசினார்.