ஆளும்கட்சிக்குள் நடக்கும் பிரச்சனைகளை எப்படி சரி செய்யலாம் என்று அதிமுக தலைமை டென்ஷனில் இருக்குனு அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். இது பற்றி விசாரித்த போது, தமிழக அரசின் 32 வாரியங்களுக்கான பதவிகள் இன்னும் நிரப்பப்படலை. அமைச்சர் பதவிக்கு இணையான இந்தப் பதவிகளைக் குறிவச்சி அ.தி.மு.க.வின் சீனியர்கள் பலரும் காத்துக்கிட்டு இருக்காங்க. இந்த நிலையில், கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனை, தமிழக அரசின் கேபிள் டி.வி. கார்ப்பரேசன் சேர்மனா நியமிச்சிருக்கார் எடப்பாடி.
இதைப்பார்த்த சீனியர்கள், கட்சிக்காக கடுமையா உழைச்ச எங்களுக்கு ஒரு பதவி கூட கிடைக்கலை. ஆனா ஏற்கனவே அமைச்சர் பதவியில் இருக்கும் ராதாகிருஷ்ணனுக்கு இன்னொரு பதவியான்னு, எடப்பாடியிடம் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். ராதாகிருஷ்ணனுக்கு கூடுதல் போஸ்டிங் கொடுக்கப்பட்டது ஏன் என்று எடப்பாடி தரப்பு கூறியுள்ளதாம். அதில், ஓ.பி.எஸ். அ.தி.மு.க.வில் மீண்டும் ஐக்கியமானப்ப, அவருக்கு வலுவான துறைகள் வேணும்னு கேட்டதால், நிதித்துறையோடு, ராதாகிருஷ்ணனிடம் இருந்த வீட்டு வசதித்துறையையும் பிடுங்கிக் கொடுத்தார் எடப்பாடி. கூடிய விரைவில் வளமான துறையைக் கொடுப்பேன்னு ராதாகிருஷ்ணனை அப்போது சமாதானப்படுத்தினாலும், ஒண்ணும் கொடுக்கலை.
சமீபத்தில் இதை எடப்பாடியிடம் ஞாபகப்படுத்திய ராதாகிருஷ்ணன், கூவத்தூரில் ஒரே நாள் இரவில் உங்களுக்கு 75 ’சி’யைப் புரட்டிக்கொடுத்தேனே, அதுக்கு கைமாறு இதுதானான்னு சூடா கேட்டாராம். அதனால்தான் அவருக்கு திடுதிப்புன்னு இந்த உபரிப் பதவி கொடுத்தோம்னு சொல்லிருக்காங்க. இதனால் எங்களுக்கும் மீதமுள்ள வாரியங்களுக்கான பதவி கொடுக்க வேண்டும் என்று அதிமுக சீனியர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளதாக சொல்கின்றனர். இதற்கு எடப்பாடி தரப்பு வாரிய பதவி போடும் போது கட்சியில் இருக்கும் சீனியர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று எடப்பாடி தரப்பு தெரிவிக்கின்றனர்.