
தமிழ் மொழி மேம்பாட்டிற்கு திமுக அரசு எதுவும் செய்யவில்லை எனக் கூறி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் புதுக்கோட்டை மாவட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் ஹெச். ராஜா உரையாற்றினார்.
பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் ஹெச். ராஜா ஆர்ப்பாட்டம் முடிந்த பின் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “கோவை குண்டு வெடிப்பு சம்பந்தமாக முதல்வர் பேசி இருக்க வேண்டும் அல்லவா. ஆனால் இப்பொழுது என்.ஐ.ஏ விடம் கொடுத்துவிட்டீர்கள். இருந்தாலும் அதை நாங்கள் வரவேற்கிறோம். அண்ணாமலை கிடுக்கிப்பிடி போட்டுப் பல உண்மைகளை வெளியில் சொல்லவில்லை என்றால் இந்த உண்மை வெளியில் வந்திருக்காது. பி.எஃப்.ஐ அமைப்பைத் தடை செய்ததும் அனைவரும் அதை வரவேற்றுத்தானே பேசி இருக்க வேண்டும். ஆனால் அதைவிடுத்து மனிதச் சங்கிலி அல்லவா நடத்தினார்கள். ஆகவே நான் சொல்கிறேன் இவர்கள் அனைவருமே பயங்கரவாதிகளின் கைக்கூலிகள். ஓட்டு வங்கி அரசியலுக்காகப் பயங்கரவாதத்தைச் சகித்துக் கொண்டு இருக்கின்ற, இந்த மண்ணிற்கு விரோதமானவர்கள்.
இந்தி திணிப்பு என்று ஸ்டாலின் பேசியது பொய். இரு மொழிக் கொள்கை தான் தமிழ்நாட்டின் மொழிக்கொள்கை என்று சொன்னீர்கள். தமிழ்நாடு அரசு மற்றும் அரசு உதவி பெறுகிற 560 பள்ளிகளில் தமிழ் ஒரு பாடமாகக் கூட இல்லாமல் மற்ற மொழிகள் உள்ளது. நான் வரவேற்கிறேன். என் கொள்கை என்பது நான் இந்தி படித்தாலும் வரவேற்கிறவன்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக 38% இடங்களில் தான் போட்டியிட்டது. அதில் 12.5% வாக்குகள் வாங்கியுள்ளது. கருத்தியல் ரீதியாக 100% திமுகவை எதிர்த்து களத்தில் பாஜக இருக்கிறது. இன்னும் எங்களுக்கு அதிகமான மாதங்கள் இடையில் இருக்கிறது” எனக் கூறியுள்ளார்.