அதிமுகவை ஏமாற்றி ரூ.100 கோடிக்கு மேலாக ராமதாஸ் பணம் வாங்கியிருப்பதாக பாமகவின் உண்மையான தொண்டர்கள் பேசிக் கொண்டிருக்கின்றனர் என்று தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.
சென்னையில் நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில்,
அதிமுக கூட்டணியில் பாமகவும், பாஜவும் சேர்ந்த பிறகு, திமுக கூட்டணியின் வெற்றி வாய்ப்பானது பன்மடங்கு உயர்ந்துள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், அரசியல் நடத்துவது பணத்துக்காகத்தான் என்பது மிக வெளிப்படையாக இப்போது தெரியவந்துள்ளது. அமைச்சர் பதவி வந்தபோது குடும்பத்தாருக்கு பதவி வழங்க மாட்டேன் என்று சொல்லிய ராமதாஸ் தன் மகனை மத்திய அமைச்சராக மகுடம் சூட்டி சந்தோஷப்பட்டார்.
அது மட்டுமல்லாமல், பல மருத்துவ கல்லூரிகளில் செய்த ஊழல்கள் எல்லாம் இப்போது மெல்ல மெல்ல வெளியாகிக் கொண்டிருக்கிறது. இப்போது கூட பார்த்தீர்கள் என்று சொன்னால், திமுகவோடு கூட்டணி பேசுகிறோம் என்று சொல்லி அதிமுகவை ஏமாற்றி ரூபாய் 100 கோடிக்கு மேலாக பணம் வாங்கியிருப்பதாக பாமகவின் உண்மையான தொண்டர்கள் பேசிக் கொண்டிருக்கின்றனர். தைலாபுரத்தில் இதற்காக குடோன்கள் கட்டப்படுவதாக செய்திகள் வந்துள்ளது.
ஓபிஎஸ்சும், இபிஎஸ்சும் அதிமுக கூட்டணியை மெகா கூட்டணி என்று சொல்கிறார்கள். இந்த கூட்டணியை மெகா கூட்டணி என்பதை ஒப்புக் கொள்கிறேன். ஆனால், மெகா கூட்டணி தேர்தலின் போது மெகா வீழ்ச்சியை அடையும். 40 தொகுதியில் ஒன்றை கூட அவர்களால் பெற முடியாது. ஒருசில இடங்களில் அதிமுகவுக்கு டெபாசிட் கிடைப்பதற்கான வாய்ப்பு இருந்தது. பாமகவும், பாஜவும் வந்த பிறகு, அந்த வாய்ப்பும் பறிபோய் விட்டது. இவ்வாறு கூறினார்.