நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனையொட்டி நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் கடந்த ஒரு மாத காலமாகத் தீவிரப்படுத்தி வருகின்றன. அதே சமயம் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.
மேலும் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள தி.மு.க. சார்பில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பல்வேறு குழுக்களை உருவாக்கி அதற்கான அறிவிப்புகளை வெளியிட்டிருந்தது. அதன்படி தி.மு.க. சார்பில் வெளியிட்டிருந்த அறிவிப்பில், கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும், தேர்தல் அறிக்கை உருவாக்கவும், தேர்தல் ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொள்ளவும் குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த குழுக்களில் தி.மு.க. மூத்த நிர்வாகிகள் இடம்பெற்றிருந்தனர். அந்த வகையில் கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திட நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு தலைமையில் அமைக்கப்பட்ட குழுவில் அமைச்சர்கள் கே.என். நேரு, ஐ. பெரியசாமி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருச்சி சிவா, ஆ. ராசா மற்றும் முன்னாள் அமைச்சர் பொன்முடி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த குழுவினர் தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அதன்படி வி.சி.க. உடன் தி.மு.க. முதற்கட்ட பேச்சுவார்த்தையை நடத்தி இருந்தது.
இத்தகைய சூழலில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பேசுகையில், “அ.தி.மு.க. கூட்டணிக்கு வி.சி.க. வந்தால் அதிக இடங்கள் கிடைக்கும். வி.சி..க., அ.தி.மு.க. கூட்டணிக்கு வந்தால் வரவேற்போம். தி.மு.க. கூட்டணியில் வி.சி.க. 3 மக்களவைத் தொகுதிகளை கேட்டு வருகிறது. தி.மு.க. 3 தொகுதிகளை தர மறுப்பதால் தொகுதிப் பங்கீட்டில் உடன்பாடு ஏற்படாத சூழல் நிலவி வருகிறது. இதனால் தி.மு.க. கூட்டணியில் இழுபறி ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க.வை பொறுத்தவரை கூட்டணிக்கு வேறு ஏதேனும் கட்சிகள் வர விரும்பினால் வரலாம். அவ்வாறு வந்தால் வரவேற்போம். வரவில்லை என்றால் டோன்ட் கேர். அ.தி.மு.க. கூட்டணிக்கு வி.சி.க. வந்தால் வி.சி.க.வுக்குத்தான் லாபம். வி.சி.க., அ.தி.மு.க. கூட்டணிக்கு வந்தால் கூடுதல் தொகுதி கிடைக்கும். தி.மு.க. கூட்டணியில் அதன் கூட்டணி கட்சிகளுக்கு அதிருப்தி இருந்தால் அதிமுகவுக்கு வரலாம்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் சென்னையில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் தென் மாநில வி.சி.க. நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் இன்று (05.03.2024) நடைபெற்றது. இதில் ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா மாநில நிர்வாகிகளும், புதுச்சேரியைச் சேர்ந்த நிர்வாகிகளும் மற்றும் இணையம் வாயிலாக கேரள மாநில நிர்வாகிகளும் கலந்துகொண்டனர். அதனைத் தொடர்ந்து அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “தெலங்கானாவில் பத்து நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆந்திராவில் இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவரோடு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அந்த கூட்டணியில் சட்டமன்ற தேர்தலிலும், நாடாளுமன்ற தேர்தலிலும் தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று பேச்சுவார்த்தை நடத்துவதற்கான முயற்சிகள் நடந்து வருகிறது. கர்நாடகாவில் ஆறு இடங்களிலும், கேரளாவில் இடுக்கி உட்பட மூன்று தொகுதிகளிலும் விசிக போட்டியிடுகிறோம்.
எங்கள் மீதுள்ள கரிசனத்துக்கும் அக்கறைக்கும் ஜெயக்குமாருக்கும் அ.தி.மு.க.வுக்கும் வி.சி.க. சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். எங்களை பொறுத்தவரை இந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்துவது தான் முதன்மையானது. தனிப்பட்ட முறையில் விருப்பு வெறுப்பு என்கிற அடிப்படையில் ஒரு முடிவை எடுக்க முயற்சிக்கப் போவதில்லை. நாட்டு நலன் கருதி மக்கள் நலன் கருதி இந்தத் தேர்தலை ஒரு கருத்தியல் போராக அணுகுகிற காரணத்தினால் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் பயணித்து வருகிறோம். அந்த நிலைப்பாட்டில் இருந்து மாறுவதற்கு வாய்ப்பில்லை. போட்டியிட உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை விரும்பியதைப் போன்று இருக்கலாம். விருப்பத்திற்கு மாறாகவும் இருக்கலாம். எங்கள் விருப்பத்தைவிடவும் பாஜகவிடம் இருந்து இந்த நாட்டை காப்பற்ற வேண்டும் என்பதே மேலானதாக இருக்கிறது என நம்புகிறோம். அதன் அடிப்படையில் எங்கள் முடிவுகள் இருக்கும்” எனத் தெரிவித்தார்.