கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில், கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் சட்டமன்ற தொகுதியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிட்ட V.T.கலைச்செல்வன் வெற்றிபெற்றார். தற்போது 2021 சட்டமன்றத் தேர்தலில் விருத்தாசலம் தொகுதி, அ.தி.மு.க கூட்டணி கட்சியான பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜெ.கார்த்திகேயன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
பா.ம.கவுக்கு ஒதுக்கப்பட்டதால், ஆத்திரமடைந்த கலைச்செல்வன் ஆதரவாளர்கள் இன்று (11.03.2021) விருத்தாச்சலம் பாலக்கரையில் 'மீண்டும் அ.தி.மு.கவுக்கு தொகுதி வழங்க வேண்டும்' என்றும், 'ஈ.பி.எஸ் மற்றும் ஓ.பி.ஸ் எடுத்த முடிவினை பரீசிலனை செய்ய வேண்டும்' என்றும் கண்டன முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்திற்காக வெளியூரிலிருந்து, தேர்தல் விதிகளை மீறி, சரக்கு வாகனத்தில் பொதுமக்களை ஏற்றிக்கொண்டு வந்தது சர்ச்சைக்குள்ளானது.
பின்னர் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தியும் கலைந்து செல்லாத அதிமுகவினர், சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். இதனால் காவல்துறைக்கும் அ.தி.மு.கவினருக்கும் இடையே கடும் வாக்குவாதத்துடன், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், காவல்துறை பலமுறை எச்சரித்தும் கலைந்து செல்லாமல் முழக்கமிட்டவாறே இருந்தனர். சுமார் ஒருமணி நேரத்திற்கு மேலாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.கவினர், பின்னர் காவல்துறையின் அறிவுறுத்தலின் பேரில் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.