அம்மா உணவகத்தில் அ.தி.மு.க. நிதியுதவியுடன் இலவச உணவு என சேலத்திற்கு ஸ்பெஷல் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. பசிக்கும் வயிறுக்கு அ.தி.மு.க-தி.மு.க. என்ற அரசியல் உண்டா? உண்டு என்கிறது ஆளுந்தரப்பு. அ.தி.மு.க அமைச்சரின் உதவியைப் பெற பெருங்கூட்டமாக மக்கள் முண்டியடித்த நிலையில், தி.மு.க.வினர் கரோனா கால சமூக ஒழுங்குடன் வழங்கிய உதவிகளை முடக்கி, அவர்களைக் கைது செய்கிறது அ.தி.மு.க அரசு.
நெல்லை மாவட்டத்தின் ராதாபுரம் தி.மு.க. ஒன்றிய செயலாளரான ஜெகதீஸ், ராதாபுரம், திசையன்விளைப் பகுதிகளிலிருக்கும் ஏழை மக்கள், அனாதைகள், சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் என்று கஷ்டபடுபவர்களுக்கு வீடு வீடாகச் சென்று உணவு வழங்கியிருக்கிறார். அதோடு ஒன்றியத்திற்கு உட்பட்ட 27 ஊராட்சிகளைச் சேர்ந்த சுமார் ஆயிரம் ஏழை மக்களுக்காக உதவும் வகையில் தன் சொந்தப் பொறுப்பில் பத்து லட்சம் மதிப்பிலான அரிசி, மளிகை பொருட்கள், காய்கறிகள் கொண்ட தொகுப்புகளை தனது மண்டபத்தில், கடந்த 11ஆம் தேதியன்று வழங்குவதற்கான ஏற்பாட்டினை செய்திருக்கிறார். அது சமயம் போலீஸ் படையுடன் வந்த திசையன்விளை இன்ஸ்பெக்டர் ஜூடி பொருட்களை வெளியே கொண்டு செல்ல அனுமதிக்காமல் தடுத்திருக்கிறார்.
மேலும், இந்த விஷயமறிந்த திசையன்விளை தாசில்தார் பாஸ்கரன் கொடுத்த புகாரின்படி, அரசு உத்தரவு மீறல் காரணமாக ஜெகதீஷ் உள்ளிட்ட ஏழு தி.மு.க.வினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, மண்டபத்திலிருந்த 250 கிலோ காய்கறிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து நம்மிடம் பேசிய ஜெகதீஷ், "சமூக இடைவெளியை முறைப்படி பின்பற்றினோம். அதேசமயம், ஏழை குடும்பங்களுக்கு உதவும் வகையில் ஆயிரம் ரூபாய் மதிப்பிலான உணவுப் பொருட்களின் தொகுப்புகளை ஒரு சில ஏழை குடும்பங்களுக்கு மட்டுமே கொடுக்க முடிந்தது. பசித்தவர்களுக்கு உணவளித்து உதவியது தவறா? அதற்காக எங்கள் மீது திசையன்விளை, கூடன்குளம் பகுதி காவல் நிலையங்களில் வழக்கு. பசித்தவர்களுக்கு உதவிய விஷயத்தில் அரசியல் கண்ணோட்டம் கூடாது'' என்றார் வேதனையுடன்.
நெல்லையை ஒட்டியுள்ள தாழையூத்தின் சங்கர்நகர், நாரணம்மாள்புரம் தி.மு.க.வின் முன்னாள் பேரூராட்சித் தலைவரான பேச்சிப் பாண்டியன், தன் சக தி.மு.க.வினருடன் தாழையூத்துப் பேரூராட்சியின் தூய்மை பணியாளர்களுக்கு சமூக இடைவெளியைப் பின்பற்றி அவர்களுக்கு உதவும் வகையில், அரிசி, பருப்பு, மற்றும் பாதுகாப்பு கவசங்களான கையுறை, முக கவசங்களை வழங்கியிருக்கிறார். அரசு உத்தரவுக்கு எதிராக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் கூட்டம் கூடியதாக பேச்சிப்பாண்டியன் உள்ளிட்ட தி.மு.க.வினர் 5 பேர் கைது செய்யப்பட்டு, ஸ்டேஷன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து நாம் பேச்சிப்பாண்டியனிடம் பேசியபோது, "அ.தி.மு.க.வினர் உதவி பொருள் வழங்கும் இடங்களில் எல்லாம் கூட்டம் சேருகிறது. அதை மட்டும் யாரும் கேட்பது கிடையாது” என்று அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
இந்த நிலையில், நாச்சிக்குறிச்சியை சேர்ந்த முருகேசன் என்பவர் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் பேக்கிரியை திறந்து வைத்ததாகவும், அதை சோமரசம் பேட்டை வி.ஏ.ஓ. மூட சொன்னதாகவும் அருகில் இருந்த திமுக விவசாயி தொழிலாளர் அணியின் மாவட்ட அமைப்பாளர் துரைபாண்டியன், (இவர் மனைவி சோமரசம்பேட்டை ஊராட்சி மன்ற தலைவர்) பேக்கரி திறக்க அனுமதி வாங்கிவிட்டேன் மூடமுடியாது என வி.ஏ.ஓ. பிரேம் ஆனந்ததை மிரட்டியதாகவும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
இது குறித்து நாம் துரைபாண்டியனிடம் பேசிய போது…"கரோனோ பிரச்சனை வந்ததிலிருந்து எங்க சோமரசம் பேட்டையில்தான் திருச்சியிலே கிருமி நாசினி அடித்தோம். எங்கள் பகுதியில் தினக்கூலிகள் அதிகம் வசிக்கும் பகுதி என சிரமப்படும் அனைவருக்கு தினமும் உதவி செய்து வருகிறோம், அதுவும் எங்களுடைய சொந்த பணத்தில் இருந்து. தற்போது தடைசெய்யப்பட்ட பகுதியில் 1500 பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கு தினமும் பிரட் கொடுத்துக்கொண்டு இருக்கிறோம். அதை உள்ளூரில் உள்ள அந்த பிரெட் கடையில் இருந்து கொடுக்கிறோம். ஊராட்சி அலுவலகம் மூடியிருந்ததால், அவர் கடையின் முன்பு அடுக்கி வைத்திருந்தார். அந்த கடையின் அருகேதான் காவல்நிலையம் உள்ளது. எல்லாம் தெரிந்தே திட்டமிட்டு, பழி வாங்கும் நோக்கோடு வழக்கு பதிவு செய்கிறார்கள்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊராட்சி அலுவலகத்தின் உள்ளே இருக்கும், வி.ஏ.ஓ. அலுவலகத்தில் வேலை செய்யும் பெண் ஒருவர் நள்ளிரவு வரை வி.ஏ.ஓ. அலுவலகத்தில் தொடர்ந்து இருப்பதை பார்த்து, நான் ஏன் பெண்ணை இரவு நேரங்களில் இங்கே தங்க வைக்கிறீர்கள் என்று சத்தம் போட்டேன். அதை மனதில் வைத்து இப்படி என் மீது புகார் கொடுத்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்'' என்றார்.
ஊடரங்கினால் வேலை இழந்து, வருமானம் இழந்து பசியால் வாடும் ஏழைகளுக்கு உதவிக்கரம் நீட்டி பசியை போக்கி வரும் நிலையில், தி.மு.க.வினர் மீது நடவடிக்கை எடுப்பதும், சேலம் மாவட்டத்தில் அ.தி.மு.க.வினர் நிதியுதவியுடன் அம்மா உணவகத்தில் இலவச உணவு என முதலமைச்சரே அறிவிப்பதும் பச்சை அரசியல்தனம் என்கிறார்கள் மக்கள்.
ஜெ.டி.ஆர்.
படங்கள் : ப.இராம்குமார்