சென்னை, கண்ணகி நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கடந்த சனிக்கிழமை (23.10.2021) கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதனை ஆய்வுசெய்த முதலமைச்சர், அங்கிருந்து புறப்பட்டார். அப்போது, அங்கு நின்றுகொண்டிருந்த M-19B மாநகர பேருந்தில் திடீரென ஏறி ஆய்வு செய்தார். பேருந்தில் இருந்த பெண்களிடம் கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் குறித்து கேட்டறிந்தார். இதுபோல் அவர் அவ்வப்போது திடீர் சோதனைகளை மேற்கொண்டுவருகிறார். இது பொதுமக்களிடம் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.
களத்திற்கு நேரடியாகச் சென்று அதிகாரிகளைச் சந்தித்து அவர்களிடம் கலந்துரையாடி பணிகளைக் குறித்து கேட்டறியும் ஸ்டாலின், தனது அமைச்சர்களின் நடவடிக்கைகள் குறித்தும் கூர்ந்து கண்காணித்துவருகிறாராம்.
இதில், சரியாக பணியாற்றாத சில துறைகளைச் சேர்ந்த அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கும் மறைமுகமாகவும் நேரடியாகவும் எச்சரிக்கை கொடுத்திருக்கிறார். முதல்வரின் இந்த எச்சரிக்கைக்குப் பிறகு சில துறைகளில் செயல்பாடுகள் மேம்பாடு அடைந்திருந்தாலும், இன்னும் சில துறைகளில் எதிர்பார்த்த அளவு மாற்றங்கள் நிகழவில்லையாம். அதனால், பணியில் தொய்வு ஏற்பட்டிருக்கும் துறைகளில் சம்பந்தப்பட்டவர்களைக் குறித்து ஒரு ஹிட் லிஸ்ட்டை அவர் தயாரித்திருப்பதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தப் பட்டியலின் அடிப்படையில் நிகழப்போகும் மாற்றங்கள் என்ன என்பது ஸ்டாலின் எடுக்கும் நடவடிக்கைகளின்போது தெரியவரும் என்றும், அதேபோல் இதனை அறிந்த துறை சார்ந்தவர்களும் ஒருவித அச்சத்தில் இருக்கிறார்கள் என்றும் கூறுகின்றன கோட்டை வட்டாரங்கள்.