ஒன்பது மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலை அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடத்துகிறது மாநில தேர்தல் ஆணையம். நேற்றுமுதல் (15.09.2021) மனு தாக்கலும் துவங்கிவிட்டன. வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய இந்த மாதம் 22ஆம் தேதி கடைசி நாள். மனுத்தாக்கலுக்கான கால அவகாசம் குறைவாக இருப்பதால் வேட்பாளர்களைத் தேர்வு செய்வதில் எல்லா கட்சிகளிடமும் சுறுசுறுப்பு காணப்படுகிறது.
இந்த நிலையில், தேர்தலை இரண்டு கட்டங்களாக நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது அதிமுக. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர், ஊரக உள்ளாட்சிகளுக்கான தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அத்துடன் இது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையத்திற்கு கடிதமும் அனுப்பியுள்ளது அதிமுக தலைமை.
இதனையடுத்து பாமகவும் இதே கோரிக்கையை முன்வைத்து கடிதம் அனுப்பியுள்ளது. பாமக தலைவர் ஜி.கே. மணி இது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், “தமிழகத்தில் மொத்தமுள்ள 37 ஊரக மாவட்டங்களில் 28 மாவட்டங்களுக்கான தேர்தல் 2019-ல் நடத்தி முடிக்கப்பட்டன. மீதமுள்ள 9 மாவட்டங்களுக்கு தற்போது தேர்தல் நடக்கவிருக்கிறது. உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டு 10 நாட்களுக்குப் பிறகு வேட்பு மனு தாக்கல் துவங்கினால்தான் அனைத்து கட்சிகளுக்கும் வேட்பாளர்களைத் தேர்வு செய்ய தேவையான கால அவகாசம் இருக்கும். ஆனால், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட 30 மணி நேரத்தில் மனுத் தாக்கல் துவங்குவதால் போதிய அவகாசம் இல்லை.
76.59 லட்சம் வாக்காளர்கள் மட்டுமே பங்கேற்கும் ஊரக உள்ளாட்சி தேர்தலை இரண்டு கட்டங்களாக நடத்துவது நியாயமற்றது. இதைவிட சுமார் 10 மடங்கு அதிக வாக்காளர்களைக் கொண்ட சட்டமன்றத் தேர்தலும் நாடாளுமன்ற தேர்தலும் ஒரே கட்டமாகத்தான் நடந்தன. ஊரக உள்ளாட்சிகளுக்கான தேர்தலைப் பிரித்து இரண்டு கட்டமாக நடத்துவது நியாயம் அல்ல. தேர்தலில் முறைகேடுகள் நடப்பதற்கு வழிவகுக்கும். இதனால், 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும்’’ என்று அந்த கடிதத்தில் கேட்டுக்கொண்டிருக்கிறார் ஜி.கே. மணி.