
நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உள்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. மேலும் நாடு முழுவதும் முதற்கட்ட மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று (20.03.2024) தொடங்கி இருக்கும் நிலையில், தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதே சமயம் பா.ஜ.க. தரப்பில் கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது.
அதே சமயம், அ.தி.மு.க. ஏற்கெனவே கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், இன்று அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள ஒரு சில கட்சிகளின் தேர்தல் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்நிலையில், அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இன்று எடப்பாடி பழனிசாமி தலைமையில், தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் முன்னிலையில் அ.தி.மு.க. - தே.மு.தி.க. இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அதன்படி அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க., திருவள்ளூர், மத்திய சென்னை, தஞ்சாவூர், விருதுநகர் மற்றும் கடலூர் ஆகிய 5 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதற்கான ஒப்பந்தத்தில் எடப்பாடி பழனிசாமி - பிரேமலதா விஜயகாந்த் ஆகிய இருவரும் கையெழுத்திட்டனர்.
இந்நிலையில், புதுச்சேரியில் உள்ள ஒரு மக்களவைத் தொகுதி உட்பட 33 தொகுதிகளில் அ.தி.மு.க. போட்டியிட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுவரையில் அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு 5 தொகுதிகளும், எஸ்.டி.பி.ஐ. கட்சிக்கு திண்டுக்கல் தொகுதியும், புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி தொகுதியும் என 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 33 தொகுதிகளிலும் அ.தி.மு.க. நேரடியாக போட்டியிடக் கூடும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. முதற்கட்டமாக 16 வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில், மீதமுள்ள 17 வேட்பாளர்களை நாளை அ.தி.மு.க. அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள புரட்சி பாரதம் கட்சிக்கு தொகுதி ஏதும் ஒதுக்கப்படவில்லை. திருவள்ளூர் தொகுதி தே.மு.தி.க.வுக்கு ஒதுக்கப்பட்டதால் புரட்சி பாரதம் கட்சி இந்த தேர்தலில் போட்டியிடவில்லை எனக் கூறப்படுகிறது. அதேபோன்று தேனி, ராமநாதபுரத்தில் அ.தி.மு.க. நேரடியாகப் போட்டியிடுவதால் இந்திய பார்வர்டு பிளாக் கட்சியும் போட்டியிடவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.