Skip to main content

பாமகவிற்கு ரஜினி கொடுத்த க்ரீன் சிக்னல்... அமித்ஷாவிற்கு அளித்த உறுதி... அரசியல் களத்தில் இறங்கிய ரஜினி! 

Published on 28/01/2020 | Edited on 28/01/2020

ஆன்மிக அரசியல் எனத் தன் நிலைப் பாட்டை இரண்டாண்டுகளுக்கு முன் வெளிப்படுத்திய ரஜினி எதிர்பார்க்கும் போர் எப்போது வரும்? எப்போது அரசியல் கட்சி தொடங்குவார் என அவரது மன்றத்தினரும் அரசியல் களமும் எதிர்பார்த்திருக்க, கட்சி தொடங்காமலேயே சர்ச்சைகளின் நாயகனாகிவிட்டார் சூப்பர் ஸ்டார்.

 

rajini



ஒரு பத்திரிகையின் 50ஆம் ஆண்டு விழாவில் பேசிய ரஜினி, "1971-ல் சேலத்தில் நடந்த தி.க.வின் மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலத்தில் ராமர், சீதை படங்களை நிர்வாணமாக வரைந்து எடுத்துச்சென்று அதனை செருப்பால் அடித்தார் பெரியார்' என்றார். ராமரை அடித்தது பெரியார் அல்ல என்று எதிர்ப்பு பரவலாக வெளிப்பட்டது. பொதுவாக, தனது பேச்சுக்கு எதிர்ப்பு வலுக்கும் போதெல்லாம், சம்பந்தப்பட்டவர்கள் மனம் புண்படாதபடி வருத்தம் தெரிவித்து முற்றுப்புள்ளி வைப்பது ரஜினியின் வழக்கம். ஆனால், பெரியார் விவகாரத்தில், மன்னிப்பு கேட்கமாட்டேன் என்று அழுத்தமாகச் சொன்னதுடன், 2017-ல் வெளியான அவுட்லுக் ஆங்கில இதழை ஆதாரமாக ஊடகங்களிடம் காட்டினார் ரஜினி.
 

periyar



இது குறித்தும் பலவித சர்ச்சைகள் தொடர்கின்றன. ரஜினி மீது பெரியாரிஸ்ட்டுகள் தொடர்ந்து வழக்குகளைப் பதிவு செய்து வருகின்றனர். விழாவில் ரஜினி பேசியதை ஆதரிக்கும் அவரைச் சார்ந்த பிரமுகர்களோ, "எந்தச் சூழலிலும் உங்கள் கருத்தை வாபஸ் வாங்காதீர்கள். அரசியலில் தி.மு.க.வை பலகீனப்படுத்த பெரியார் செயல்களை நீங்கள் விமர்சிப்பதுதான் சரியாக இருக்கும்' எனத் தெரிவித்துள்ளனராம்.

 

pmk



அக்டோபருக்குள் இரண்டு படங்களை முடித்துவிட்டு, அரசியல் கட்சி தொடங்கலாமா என ஆலோசித்து வரும் ரஜினி, எக்காரணம் கொண்டும் பா.ஜ.க.வின் நேரடி அரசியலுக்குள் சிக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறாராம். "என்னுடைய தனித்த செயல்பாடும், அதில் கிடைக்கும் வெற்றியும் உங்களுக்கானதுதான்' என ஏற்கனவே அமித்ஷாவிடம் உறுதி தந்திருக்கிறார் ரஜினி. பா.ஜ.க.வைப் பொறுத்தவரை, தமிழ்நாட்டில் பெரியார் முன்னெடுத்த திராவிட அரசியல் சித்தாந்தத்தைத் தகர்த்தால் அ.தி.மு.க., தி.மு.க. வாக்கு வலிமையை சிதறடித்து, தாங்கள் மெல்ல மெல்ல கால் ஊன்ற முடியும் என நினைக்கிறது. அதற்கு ஊன்றுகோலாக ரஜினியைக் கருதுகிறது. குறிப்பாக, இத்தனைக்குப் பிறகும் தி.மு.க.வுக்கு ஆதரவாக உள்ள இந்து சமூக வாக்குகளை சிதறடித்து, எதிர்காலத்தில் தங்கள் வசமாக்குவதுதான் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. திட்டம். அதற்கு ரஜினி உதவுவார் என தேர்தல் வியூக வல்லுநர்களும் தெரிவித்துள்ளனர். இந்த அசைன்மெண்ட்படிதான் பத்திரிகை விழா ரணகளங்கள் தொடர்கின்றன.

தமிழ்நாட்டில் பெரியாருக்கு கட்சிகளைக் கடந்தும், மதங்களைக் கடந்தும் மதிப்பிருப்பதை ஹெச்.ராஜா கிளப்பிய சர்ச்சையின்போதே பார்த்து விட்டதால், ரஜினி சற்று தயங்கியிருக்கிறார். பா.ஜ.க.வின் சுப்பிரமணியசாமியும், ஆடிட்டர் குருமூர்த்தியும் ரஜினியிடம் தைரியம் சொல்லியிருக்கிறார்கள். அதனால்தான் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்ற ரஜினியின் பேட்டி ஒளிபரப்பானபோது, அதைப் பார்க்கும்படி ட்வீட் செய்தார் குருமூர்த்தி.


சுப்பிரமணியசாமியோ சில மாதங்களுக்கு முன், அரசியலும் சினிமாவும் ஒண்ணில்ல.. ரஜினி வர்றார்னு சொல்றாங்க. எங்கே வர்றார்? தேர்தல் வந்தால் அடுத்த தேர்தலில் போட்டியிடுறேன்னு சொல்லிட்டுப் போயிடுவார். அவர் வரமாட்டார். ஒருவேளை வந்தார்னா, உடனடியாக ஜெயிலுக்குப் போவார்' என்று சொல்லியிருந்தார். ஆனால், பெரியார் சர்ச்சை குறித்து ஊடகங்களை ரஜினி சந்தித்த வேளையில், "ரஜினி தனது கருத்தில் உறுதியாக இருந்தால், அவருக்கு ஆதரவளிக்கவும், கோர்ட்டில் அவருக்காக வாதாடவும் தயாராக இருக்கிறேன்' என ட்வீட் செய்தார். விழா முடிந்து, ஒரு வாரம் கழித்து ஊடகத்தை ரஜினி சந்தித்ததிலும் சு.சாமி, குருமூர்த்தி ஆகியோரின் ஆலோசனை உள்ளதாம்.

ரஜினி தனியாக அரசியல் கட்சி தொடங்கினால் வடதமிழகத்தில் தி.மு.க.வின் செல்வாக்கை சரிக்க, பா.ம.க.வுடன் கைகோர்ப்பது குறித்து ஆலோசகர்கள் தெரிவிக்க, ரஜினியும் க்ரீன் சிக்னல் தந்துள்ளாராம். பா.ம.க. தரப்பில் டாக்டர் ராமதாஸ், அன்புமணி இருவருக்கும் அ.தி.மு.க.வை உதறிவிட்டு, ரஜினி பக்கம் வர விருப்பம்தானாம்.


தி.மு.க.தான் பா.ஜ.க.வின் முதன்மை இலக்கு. அதனால் பெரியாரிடமிருந்து அண்ணா பிரிந்திருந்த காலத்தில் இருதரப்பிலும் வைக்கப்பட்ட விமர்சனங்களை எடுத்து ரஜினியிடம் கொடுப்பது, சேலம் தி.க. மாநாடு தொடர்பாக அந்த பத்திரிகையில் வந்த தகவல்களை மறுபிரசுரம் செய்வது என அடுத்தடுத்த திட்டங்களும் தயாராகின்றன.

ஆயிரம் ஆண்டுகால அடிமைத்தனத்தை தகர்த்தெறிந்த பெரியாரின் கருத்துகள் பரவியுள்ள மண்ணில், தாமரையை மலரச் செய்வதற்காக எந்த எல்லைக்கும் செல்லத் தயாராக இருக்கும் பா.ஜ.க., தன் வலையில் ரஜினியை விழச் செய்துள்ளது.


 

 

சார்ந்த செய்திகள்