
கரோனா தாக்கத்தால் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தில் மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் முடங்கிப் போய்விட்டன. நோயோடு வாழப் பழகிக்கொள்ளுங்கள் என்கிற ரீதியில் எடப்பாடி அரசும் மக்களைக் கைவிட்டுவிட்டது. இந்த நிலையில், மக்களிடமிருந்து லட்சக்கணக்கான அழைப்புகள் தி.மு.க.வின் பொது உதவி எண்ணிற்க்கு வருவதால், அந்த உதவி எண் மூலம் பெறப்பட்ட 6,23,914 கோரிக்கை மனுக்களை இரண்டாவது முறையாக முதலமைச்சரின் அலுவலகத்தில் சமர்ப்பித்துள்ளார் தி.மு.க. தலைவர் ஸ்டாலின்.
"எதிர்க்கட்சியாக இருந்த போதிலும் தி.மு.க.வால் பெறப்பட்ட இந்தப் பெரிய அளவிலான கோரிக்கைகள், தமிழக மக்கள் பெருந்துயரத்தில் இருப்பதின் சான்றாகும்" என்று இந்த மனுக்களைச் சமர்ப்பிக்கும் போது மு.க.ஸ்டாலின் கூறினார்.
இந்த மனுக்களை மின் அஞ்சல் செய்வதைத் தவிர, சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கை மனுக்களின் அனைத்து விவரங்களும் இணையத்தளத்தில் வெளியிடப்படுகின்றன. தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் இந்த மனுக்களை அந்தந்த மாவட்ட அதிகாரிகளிடம் தனிப்பட்ட முறையில் சமர்ப்பிப்பார்கள். மேலும் பிரச்சனைகளுக்காக எடுக்கப்படும் நடவடிக்கை நிலையைப் பற்றி தொடர்ந்து பின்தொடர்வார்கள்.
'ஒன்றிணைவோம் வா' எனும் முன்னெடுப்பில், பொதுமக்களுக்கான உதவி எண், மு.க.ஸ்டாலின் அலுவலகத்துடன் அனைவரும் தொடர்பு கொள்ளும் மையமாக உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள ஸ்டாலினின் அலுவலகத்திற்கு இன்றுவரை மொத்தம் 18 லட்சத்திற்கு மேலான துயர அழைப்புகள் வந்துள்ளன. தி.மு.க. உறுப்பினர்கள், குடிமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் தங்களுக்குக் கிடைக்கும் வளங்களைப் பயன்படுத்தி இந்தப் பிரச்சனைகளைத் தொடர்ந்து கவனித்து வருவதால், தி.மு.க. இந்தக் கடினமான நேரத்தில் துன்பத்தில் இருக்கும் ஒவ்வொரு குடிமகனின் குரலாக விளங்கி அவர்களின் பிரச்சனைகளைச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் எழுப்பி வருகிறது.
தேவைப்படும் குடிமக்களுக்கு திறம்பட உதவுவதற்கு கிடைக்கக்கூடிய வளங்களையும், அரசு அதிகாரங்களையும் பயன்படுத்துமாறு தி.மு.க. அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. இதற்கு முன்னால், அவசர நடவடிக்கைக்காக மக்கள் உதவி எண்ணில் பெறப்பட்ட 1 லட்சம் கோரிக்கைகளின் தொகுப்பையும் கட்சி முன்பு சமர்ப்பித்தது.