Skip to main content

பரந்தூர் மக்களைச் சந்திக்கும் விஜய்; காவல்துறை விதித்த 4 நிபந்தனைகள்!

Published on 20/01/2025 | Edited on 20/01/2025
4 conditions imposed by the police for Vijay meets the people of Parantur

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல மாதங்களாக பல்வேறு கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதே சமயம் தொடர்ச்சியாக அரசு சார்பில் நிலம் எடுக்கும் பணிகள் ஆகியவற்றுக்கான உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டு வருகிறது. இத்தகைய சூழலில் தான் போராட்டக் குழுவினரை தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.

இதனை உறுதிப்படுத்தும் விதமாக விஜய் போராட்டக்காரர்களை இன்று (20-01-25) சந்திக்க அனுமதி வழங்கி காஞ்சிபுரம் காவல்துறை அனுமதி அளித்திருந்தது. முன்னதாக பரந்தூரில் உள்ள தனியார் மண்டபத்தில் விஜய் போராட்டக்குழுவினரை சந்திக்க திட்டமிடப்பட்டதாக கூறப்பட்டது. இதனையடுத்து எகனாபுரம் அம்பேத்கர் திடலில் போராட்டக் குழுவினரரை விஜய் இன்று (20.01.2025) காலை 11 மணிக்கு சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது.  மேலும் திடலில் கேரவனில் இருந்தபடியே விஜய் உரையாற்ற இருப்பதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில், பரந்தூர் விமான நிலைய திட்டத்துக்கு எதிராக போராடும் மக்களை விஜய் சந்திக்கும் நிகழ்ச்சிக்கு, நீண்ட நேரத்திற்கு பிறகு 4 நிபந்தனைகளை விதித்து காவல்துறையினர் அனுமதி அளித்துள்ளனர். பரந்தூர் விமான நிலையம் அமையவுள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும், திருமண மண்டபம் கொள்ளத்தக்க அளவில் மட்டுமே மக்களை அனுமதிக்க வேண்டும், திட்டமிட்டப்படி காலை 11:30 மணி முதல் 12:30 மணிக்குள் நிகழ்ச்சியை நடத்தி முடிக்க வேண்டும், சட்டம் ஒழுங்கைப் பேண காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்ற 4 நிபந்தனைகளை விதித்து விஜய் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு காவல்துறை அனுமதி அளித்துள்ளது. 

சார்ந்த செய்திகள்