தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு தமிழக தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் நேர்காணல் என பரபரப்பாக இயங்கி வருகின்றன. இன்னும் சில கட்சிகளில் கூட்டணி தொகுதிப் பங்கீட்டில் இழுபறி என்பது நீடித்தே வருகிறது. இந்த நிலையில் வரும் சட்டமன்ற தேர்தலையும் தனித்து எதிர்கொள்கிறது 'நாம் தமிழர் கட்சி'. ஏற்கனவே இதற்கான அறிவிப்பை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்திருந்தார்.
கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலிலும் ஆண் வேட்பாளர்களுக்கு இணையாக பெண் வேட்பாளர்கள் நாம் தமிழர் சார்பில் களமிறக்கப்பட்டனர். இந்த தேர்தலிலும் மற்ற கட்சிகள் வேட்பாளர்களை அறிவிப்பதற்கு முன்பாகவே நாம் தமிழர் கட்சி 50 சதவீதத்திற்கும் மேலான வேட்பாளர்களை அறிவிதித்திருந்தது. இந்நிலையில் 117 ஆண் வேட்பாளர்கள் ,117 பெண் வேட்பாளர்கள் ஒரே மேடையில் அதிகாரபூர்வமாக அறிமுகப்படுத்த இருக்கின்றனர். அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், இன்று ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ திடலில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் ஒரே மேடையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் 234 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுகப்படுத்தப்பட இருக்கின்றனர். இத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிட இருக்கும் நிலையில் அவர் எந்த தொகுதியில் போட்டியிட இருக்கிறார் என்று அதிகாரப்பூர்வ தகவல் இன்று மாலை பொதுக்கூட்டத்தில் தெரியவரும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதேபோல் நாம் தமிழர் கட்சியின் செயற்பாட்டு வரைவு ஆவணமும் பொதுக்கூட்டத்தில் வெளியப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.