ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆளுங்கட்சியான திமுக அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரசுக்கு இத்தொகுதியை மீண்டும் ஒதுக்கி உள்ளது. காங்கிரசின் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டன. அதிமுக இடைத்தேர்தலில் வேட்பாளரைக் களமிறக்கத் தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில், புதிய நீதிக்கட்சியின் ஏ.சி.சண்முகத்தை ஓபிஎஸ் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்த சந்திப்பிற்குப் பிறகு ஏ.சி.சண்முகம், பன்னீர்செல்வம் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்பொழுது பேசிய ஓ.பன்னீர்செல்வம், ''நேற்று தனது நிலைப்பாட்டை ஏ.சி.சண்முகம் தெரிவித்திருந்தார். நாங்கள் எல்லோருமே தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கிறோம். அந்த கருத்தின் அடிப்படையில் அவரது கருத்தை தெரிவித்திருக்கிறார். இருந்தாலும் நாங்கள் இன்று இருக்கின்ற சூழ்நிலையில் அதிமுக சார்பில் இரட்டை இலை சின்னத்தில் வேட்பாளரை நிறுத்தக்கூடிய சூழல் ஏற்பட்டிருப்பதை அறிந்து, அந்த அடிப்படையில் அவரை நாங்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்துள்ளோம்.
பொதுவாகவே தேர்தல் வேட்புமனுத் தாக்கல் முடிவதற்கு முன்னால் பல்வேறு கட்சிகளுடைய நிலைப்பாடு மாறிவிடும் சூழ்நிலை ஏற்படும். அந்த சூழ்நிலைகளுக்கு ஏற்ப அவர்கள் தங்கள் நிலைகளை மாற்றிக் கொள்வார்கள் என்பது தான் கடந்த காலத்திலிருந்து நிதர்சனம். எங்களுடைய நிலைப்பாட்டை நாங்கள் சொல்லி இருக்கிறோம். கூடிய விரைவில் வேட்பாளரை அறிவிப்போம். அதிமுக நடுநிலை தொண்டர்கள், பிரிந்து இருக்கின்ற எம்ஜிஆரின் உடைய சக்தி, ஜெயலலிதாவின் சக்தி என அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்பதுதான் எங்களுடைய நிலைப்பாடு. பிரதமரும் அதிமுக ஒன்றுபட்டு தேர்தல் களத்தில் இருக்க வேண்டும் என்று தான் வலியுறுத்துகிறார். நாங்களும் அதைத்தான் விரும்புகிறோம். அதற்கு யார் மறுப்பு தெரிவிக்கிறார்கள் என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும்'' என்றார்.
அப்பொழுது செய்தியாளர், “பிரதமர் மோடி உங்களிடம் இதைச் சொன்னாரா?” எனக் கேள்வி எழுப்ப, அதற்கு பதிலளித்த ஓ.பன்னீர்செல்வம், “எங்களை பார்க்கும்போதெல்லாம் மோடி இதைச் சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார். வலியுறுத்திக் கொண்டுதான் இருக்கிறார்” என்றார்.