சென்னையை அடுத்த பனையூரில் கிழக்கு கடற்கரை சாலையில் தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வீட்டின் அருகே பா.ஜ.க.வின் அனுமதியின்றி 100 அடி உயரத்தில் கொடிக் கம்பம் நட்டனர். இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கவே அதனை அகற்ற காவல்துறையினர் ஜெ.சி.பி. எந்திரத்துடன் அங்கு வந்தனர். இதனை அறிந்த ஏராளமான பா.ஜ.க.வினர் அங்கு குவிந்து ஜெ.சி.பி.-யை அடித்துள்ளனர். மேலும், போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து அங்கு குவிந்திருந்த பா.ஜ.க.வினரை போலீஸார் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர். மேலும், அனுமதியின்றி வைக்கப்பட்ட கொடிக் கம்பத்தையும் அகற்றினர். இந்தப் போராட்டத்தில், பாஜக சமூக ஊடக பிரிவு மாநிலச் செயலாளர் விவின் பாஸ்கருக்கு காயம் ஏற்பட்டு ரத்தம் கசிந்தது. அவரை மீட்ட பா.ஜ.க.வினர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
பா.ஜ.க. கொடிக் கம்பம் விவகாரம்! நள்ளிரவில் நடந்தது என்ன?
இந்நிலையில், இது தொடர்பாக பா.ஜ.க தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை தனது சமூகவலைத்தளப் பக்கமான எக்ஸில், “குண்டு வைத்து மக்கள் பலரைக் கொன்ற தீவிரவாதிகளை எல்லாம், அரசியலுக்காக விடுதலை செய்யத் துடிக்கும் திமுக, தீவிரவாதிகள் காரில் வெடிகுண்டுகளோடு சுதந்திரமாகச் சுற்றித் திரியும் அளவுக்கு உளவுத்துறையில் கோட்டை விட்ட திமுக, பனையூரில் கிளை தலைவர் ஏற்பாட்டில் நடப்பட்டிருந்த கொடிக்கம்பத்தை அகற்ற, தீவிரவாதிகளைக் கைது செய்யப் போவது போல நள்ளிரவில் பெரும் போலீஸ் படையுடன் புறப்பட்டு வந்தது பெரும் வினோதம்.
திமுக அரசின் உத்தரவின் பேரில், நள்ளிரவில் கொடிக்கம்பத்தை அகற்ற வந்த காவல்துறையினரை எதிர்த்துப் போராடிய தமிழ்நாடு பா.ஜ.க. சகோதர சகோதரிகள் மீது, காட்டுமிராண்டித் தனமான தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். பொதுமக்களை ஏய்த்து பிழைப்பை நடத்திக் கொண்டிருக்கும் திமுக, எங்கள் தொண்டர்கள் சிந்திய ஒவ்வொரு துளி ரத்தத்திற்கும் பெரும் விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்பதைச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.
அதிகாரத் திமிரில் அராஜகம் செய்து கொண்டிருக்கும் திமுக, தமிழக பாஜகவின் ஒரு கொடிக்கம்பத்தை அகற்றிவிட்டதால் வெற்றி பெற்றதாக நினைத்துக் கொள்ள வேண்டாம். நவம்பர் 1ஆம் தேதி தொடங்கி 100 நாட்களுக்கு ஒவ்வொரு நாளும் தமிழகம் முழுவதும் 100 பாஜக கொடிக்கம்பங்கள் நடப்படும்.
பத்தாயிரமாவது கொடி கம்பம் அடுத்த வருடம் பிப்ரவரி 8ஆம் தேதி (100வது நாள்) நேற்று காவல்துறையினரின் தடியடியில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் சகோதரர் விவின் பாஸ்கரனின் முன்னிலையில் கொடி கம்பம் அகற்றப்பட்ட அதே பனையூரில் நடப்படும் என்பதையும் ஊழல் திமுக அரசுக்கு மிக பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று பதிவிட்டுள்ளார்.