இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்குத் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில் இந்தியா அண்மையில் 12 வயது, அதற்கும் மேற்பட்டோருக்கான ஸைடஸ் காடிலா நிறுவனத்தின் ‘ஸைகோவி - டி' தடுப்பூசிக்கு அனுமதி வழங்கியது.
இதனைத்தொடர்ந்து இந்த தடுப்பூசி விரைவில் பயன்பாட்டிற்கு வரும் எனத் தகவல் வெளியானது. இந்தநிலையில் இந்த ஸைகோவி - டி தடுப்பூசிகள் இம்மாதத்திலிருந்து மக்களுக்குச் செலுத்தப்பட இருப்பதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதற்காக மத்திய அரசு ஒரு கோடி தடுப்பூசிகளுக்கு ஆர்டர் அளித்திருப்பதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும் இந்த ‘ஸைகோவி - டி' தடுப்பூசி முதலில், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே செலுத்தப்படும் எனவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஸைடஸ் காடிலா நிறுவனத்தின் இந்த ஸைகோவி-டி தடுப்பூசி, மொத்தம் மூன்று டோஸ்களைக் கொண்டதாகும். முதல் டோஸ் செலுத்தப்பட்ட 28வது நாளில் இரண்டாவது டோஸையும், 56வது நாளில் மூன்றாவது டோஸையும் செலுத்திக்கொள்ளலாம். டி.என்.ஏ பிளாஸ்மிட்டைக் கொண்டு தயாரிக்கப்பட்ட உலகின் முதல் கரோனா தடுப்பூசி இதுவென்பதும் இங்குக் குறிப்பிடத்தக்கது.